சண்டிகர்: சண்டிகரில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் பெயரில் கணக்கு ெதாடங்கி அதன் மூலம் காமக் கதைகளையும், நிர்வாண வீடியோக்களையும் அனுப்பி மிரட்டல் விடுத்த மூன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை மூலம் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி அதன் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சண்டிகர் போலீசார் ‘நிர்வாண வீடியோ’ எடுத்து ஆண்களை மிரட்டி பணம் பறித்த ராஜஸ்தானை சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சண்டிகர் போலீஸ் எஸ்பி பன்சால் கூறுகையில், ‘பெண்களின் புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளை சமூக வலைதளங்களில் தொடங்கி பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார்கள் வந்தன. அந்த வகையில் பலருக்கு பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி அதன் மூலம் ஆண்களை மிரட்டிய கும்பலை சேர்ந்த முபின் (39), ரஷீத் (19), அஜ்ருதீன் (24) ஆகியோரை கைது செய்துள்ளோம். முபின் என்பவன் 12ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கைத்வாராவில் மொபைல் கடை நடத்தி வருகிறான்.
ரஷீத் என்பவன் ஐடிஐ படிப்பு படிக்கிறான். அஜ்ருதீன் என்பவன் 8ம் வகுப்பு படிப்பை பாதியில் இடைநின்றுவிட்டான். மூவரும் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்ட போலி கணக்குகள் மூலம் ஆண் நண்பர்களிடம் நட்பு கொள்வர். பின்னர் பெண்களின் ஆபாச படங்களை மார்பிங் செய்து புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் அவர்களுக்கு அனுப்புவர். ஒருகட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்பும்படி கேட்பர். அவர்களும் இவர்களின் ஜொள்ளு அழைப்பில் மயங்கி தங்களது நிர்வாண வீடியோக்களை அனுப்பி வைப்பர்.
பின்னர் சம்பந்தப்பட்ட ஆண்களின் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி அவர்களுக்கு மிரட்டல் விடுப்பர். இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர்கள் கேட்கும் தொகையை சிலர் கொடுத்துள்ளனர். சிலருக்கு பெண்களை போன்று டப்பிங் ஆடியோ, வீடியோவை பயன்படுத்தி அதன் கிளிப்புகளை பயன்படுத்தி காமக் கதைகளையும், பெண்களின் நிர்வாண படங்களையும் அனுப்பி உள்ளனர்.
அவர்களிடம் மிரட்டலுக்கு பணியாத நபர்களிடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும், சீருடை அணிந்த போலீஸ்காரர் பேசுவது போன்ற டப்பிங் ஆடியோ மற்றும் புகைப்படத்தை அனுப்பி மிரட்டி வந்துள்ளனர். தற்போது இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 419, 420, 384, 120-பி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது’ என்றார்.