காரைக்குடி:
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. மாதா அதாவது அன்னை தந்தையை காட்டுகிறார். தந்தை குருவை அடையாளப்படுத்துகிறார். குரு தெய்வத்தை நமக்கு மனதில் நிறுத்துகிறார். அந்த வகையில் இந்த சாய்பாபா ஆலயத்தை ஒரு குருஷேத்திரமாகவே பார்க்கிறேன் என்று துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாசக தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியுள்ளார்.
Recommended Video
காரைக்குடி பி எல் பி கல்யாண மண்டபத்திற்கு அருகே சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் குருவார பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாசக தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் ஆலயத்திற்கு வந்து அருள் உரை வழங்கினார்.
அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பு மாநில தலைவர் சபரி டிராவல்ஸ் உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்கள் சுவாமிகளை ஆலயத்திற்கு அழைத்து வந்தார். சாய்பாபா மேல் அளவற்ற பக்தி கொண்டவர் திரு. கோவிந்தராஜ். ஆண்டுக்கு இருமுறையாவது சீரடிக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். மேலும் காசி, அமர்நாத் போன்ற புனித தலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான மூலமாகவும் ரயில் மூலமாகவும் பக்தர்களை அழைத்துச் செல்கிறார். அனைத்து இந்து கோயில்கள் பாதுகாப்பு நல அமைப்பு என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலமாக சமயத் தொண்டு செய்து வருகிறார்.
ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள நிறைகுறையில் கேட்டறிந்து அதற்கு ஏற்ற வகையிலே நற்காரியங்களை நடத்துகிறார். “ஆலயம் காப்போம்… ஆன்மீகம் வளர்ப்போம்” என்ற தாரக மந்திரத்தோடு இவர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தில் ஆன்மீக அருள்
சீரடி சாய்பாபா டிரஸ்ட் தலைவர் திரு. சாத்தையா அவர்கள் பரமாச்சார்ய சுவாமிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். தமிழ் நம்முடைய தாய்மொழி. ஆகவே ஒவ்வொரு ஆலயத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அது தமிழுக்கு செய்யும் மரியாதை. அந்த வகையில் நம்முடைய சாய்பாபா ஆலயத்தில் பூஜை தொடங்குவதற்கு முன்பாக தமிழை வணங்கி வழிபாட்டை ஆரம்பித்தால் சிறப்பு என்று கருதினேன்.
இது குறித்து பல அறிஞர்களிடம் கருத்து கேட்டேன். அவர்களும் தாராளமாக தமிழ் தாய் வாழ்த்து பாடுவது சிறப்பு என்று கூறினார்கள். அந்த வகையிலே நம்முடைய ஆலயத்தில் தமிழ் தாய் வாழ்த்தோடு வழிபாடு தொடங்குவது குறிப்பிடத்தக்க அம்சம் என்று திரு. சாத்தையா குறிப்பிட்டார். ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும்.அவர்கள் மனதிலே பக்தியை ஆழமாக விதைக்க வேண்டும்.
அவர்கள்தான் எதிர்கால சந்ததியினர். ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பக்தியும் ஒழுக்கமும் ஏற்பட்டால் சமுதாயத்தில் பாதகமான விளைவுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். ஆண்டவனை மனத்தூய்மையோடு வழிபட வேண்டும். ஆடம்பரமாக செய்தால் அது வெறும் சடங்காக மட்டுமே அமையும் என்று எளிமையின் மறு உருவாக இருக்கின்ற திரு. சாத்தையா அவர்கள் தெரிவித்தார். இவர் ஓய்வு பெற்ற சிறைத் துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தமயமான பக்தி
ஆன்மீகம் குறித்தும் ஆனந்த மயமான பக்தி செலுத்துவது பற்றியும் சுவாமிகள் அற்புதமான ஆன்மீக உரை ஆற்றினார். பக்தி மார்க்கம் பற்றி அறியாத பாமர மக்களுக்கு சிவ தீட்சை தர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த ஆதீனம் தொடங்கப்பட்டது. நம்முடைய இந்து சமயத்தில் வழிபாட்டு முறைகள் ஆறு வகையாக பகுக்கப்பட்டு இருக்கின்றன. 1 சைவம், 2 வைணவம், 3 சாக்தம், 4 கணாபத்தியம், 5 கௌமாரம், 6 சௌரம். சைவம் என்பது சிவனை முதன்மையாகக் கொண்டு வழிபடுவது. வைணவம் என்பது மகாவிஷ்ணுவை மனதில் வைத்து வழிபடுவது. சாக்தம் என்பது சக்தியை பிரதானமாக கொண்டு பூஜிப்பது. கணாபத்தியம் என்பது விநாயகனை முதன்மைப்படுத்தி வணங்குவது. கௌமாரம் என்பது ஆறுமுக கடவுளான முருகப்பெருமானை வழிபடுவது. சௌரம் என்பது சூரியனை வழிபாடு செய்வது. இப்படியாக ஆறு வகை வழிபாடுகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். அதற்கு ஷண்மதம் என்று பெயர் என பரமாச்சாரியார் சுவாமிகள் குறிப்பிட்டார்கள்.
பிள்ளைகளுக்கு பக்தி உணர்வு
மேலும் ஒவ்வொரு பிரவினரும் சிறு வயதாக இருக்கின்ற பொழுது பிள்ளைகளுக்கு தீட்சை வழங்குகிறார்கள். பிராமணர்களை எடுத்துக் கொண்டால் ஏழு வயதில் பூணூல் போட்டு காயத்ரி மந்திரம் ஜெபம் பண்ணச் சொல்கிறார்கள். அதன் பிறகு வேத ஆகமங்களை கற்பிக்கிறார்கள். அதேபோல் ஐயங்காார்கள் அஷ்டோத்திர மந்திரத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுபோல பிற மதங்களிலும் பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறியை கற்றுக் கொடுப்பதற்காக சிறு வயதிலேயே பக்தி மார்க்கத்தில் ஈடுபட செய்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருந்தாலும் சைவம் வைணவம் இரண்டும் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மற்றவை அதை ஒட்டியே வழிபாடு செய்யப்படுகின்றன.
புனித நீராடல்
நாம் கண்டிப்பாக ஒவ்வொரு நாள் காலையில் நீராடுகின்ற பொழுது நமக்குத் தெரிந்த மந்திரங்களை அல்லது பாசுரங்களை சொல்லி நீராட வேண்டும். அதனால் மிகப் பெரிய நன்மைகள் ஏற்படும். நாம் சாதாரணமாக குளிப்பதற்கு பெயர் நீராடுதல். அதே நேரத்தில் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு குளித்தால் அதற்கு பெயர் தீர்த்தமாடுதல். அது நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் மிகப்பெரிய நன்மையை தரும் என்று சொன்னார்.
இந்த பாபா ஆலயத்திற்கு நான் வந்திருப்பதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. மாதா அதாவது அன்னை தந்தையை காட்டுகிறார். தந்தை குருவை அடையாளப்படுத்துகிறார். குரு தெய்வத்தை நமக்கு மனதில் நிறுத்துகிறார். அந்த வகையில் இந்த சாய்பாபா ஆலயத்தை ஒரு குருஷேத்திரமாகவே பார்க்கிறேன் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.
ஆலயத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.ஆரத்தி பூஜைக்கு முன்னதாக வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி பாபாவை பரவசத்தில் ஆழ்த்தினர்.
சாய்பாபாவின் பெருமைகள்
காரைக்குடி ஜோதிடர் கவிஞர் பெர்னாட்ஷா அவர்கள் பாபா பெருமை குறித்து பேசினார். சாய்பாபா அவர்கள் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். நம்ப முடியாத அதிசயங்களை செய்து இருக்கிறார் என்று உரையை தொடங்கினார்.சென்னையில் ஒரு தம்பதியினர் ராமர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர்கள்.
ராம பஜனை செய்வதில் ஆனந்தப்படுபவர்கள்.
சீரடியில் பாபா அவர்கள் மக்களுக்கு ஆசி வழங்குவது குறித்தும் அவருடைய அற்புதங்கள் குறித்தும் அவரைப் பற்றி பஜனை பாடினால் பொன்னும் பொருளும் தருகிறார் என்றும் ஒரு அன்பர் இந்த தம்பதியிடம் சொல்லி இருக்கிறார்.
இதை கேள்விப்பட்ட இந்த தம்பதியினர் நாமும் சென்று பஜனை பாடினால் நமக்கு பொன்னும் பொருளும் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு சீரடிக்கு செல்கிறார்கள்.
அங்கு சென்று பாபாவை தரிசிக்கிறார்கள். பாபாவின் முகத்தை பார்த்த உடனேயே அந்த பெண்மணிக்கு மிகப்பெரிய மனமாற்றம் ஏற்படுகிறது. பிறகு இருவரும் பஜனை பாடல்களை பாடுகிறார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி பாபா எதையும் தரவில்லை. கணவனுக்கு மனதில் மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் மனைவி ஐயம் தெளிகிறார். அதாவது அந்தப் பெண்மணியின் ராம பக்தியை உணர்ந்த பாபா அவர்கள், அந்த பெண்மணிக்கு ராமனாகவே காட்சி தருகிறார்.
அந்த பெண்மணிக்கு பணத்தாசை அறவே போய்விடுகிறது. கணவன் மனைவி இருவரும் சென்னைக்கு திரும்புகிறார்கள். பாபா ராமனாக காட்சி அளித்த செய்தியை கணவனுக்கு கூறுகிறார். கணவன் நம்ப மறுக்கிறார். நீ பொய் சொல்கிறாய். எனக்கு அப்படி தோன்றவில்லை என்று கணவர் மறுக்கிறார்.இல்லை நான் கண்ணாரக் கண்டேன். அவர் ராமனாக இருக்கிறார். சிவனாக இருக்கிறார். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறார் என்று கணவனிடம் வாதிடுகிறார்.
ஆனால் கணவருக்கு மன மாற்றம் ஏற்படவில்லை. இதை சீரடியில் இருந்த பாபா உணர்கிறார். அந்த கணவருக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று இரவு கனவிலே வருகிறார். அந்த கனவு ஒரு கொடூரமானது. அந்த பக்தர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். காவலாளி நிற்கிறான். கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது.
உடனே அந்த பக்தர் பாபாவை கேட்கிறார். நான் என்ன பாவம் செய்தேன். எனக்கேன் இந்த தண்டனை என்று கதறுகிறார். உடனே பாபா அவரை கண்ணை மூடச் சொல்கிறார். அவர் கண்ணை மூடி திறந்தவுடன் அந்த காவலாளி இறந்து கிடப்பதை பார்க்கிறார். அப்பொழுது பாபா சொல்கிறார். நீ ஏற்கனவே சிறையில் இருக்கிறாய் இந்த காவலாளியும் இறந்து விட்டான் இதற்கு காரணம் நீதான் என்று இன்னும் தண்டனை அனுபவிக்கப் போகிறாய் என்று குறிப்பிடுகிறார். அந்த மனிதர் நடுங்கி போய் நிற்கிறார். நீ கர்ம வினையை அனுபவிக்க வேண்டும். அந்த கர்மவினை போனால் தான் நல்லது நடக்கும் என்று பாபா குறிப்பிடுகிறார்.
உடனே அந்த பக்தருக்கு மாயை விலகுகிறது. பாபாவின் அற்புதமான தோற்றம் மனதில் பிரகாசமாக உருவெடுக்கிறது. உண்மை தெளிந்து பாபாவின் சக்தியை உணர்கிறார். அப்படியே சிறையில் இருந்தபடியே விழுந்து வணங்குகிறார்.
பாபா சிரித்தபடி மீண்டும் கண்ணை மூடச் சொல்கிறார். பிறகு திறந்து பார்த்தால் சிறைச்சாலையும் இல்லை இறந்து போன காவலாளியும் இல்லை பாபா மட்டுமே நிற்கிறார். அப்படியே அவர் பாதத்தை பற்றி நான் உண்மையை உணர்ந்து விட்டேன் என்று கதறுகிறார் அந்த பக்தர். பாபா மறைந்து போகிறார். மறுநாள் காலை எழுந்தவுடன் மனைவியிடம் அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். பாபா காட்சி தந்த அற்புதத்தையும் குறிப்பிடுகிறார். பிறகு இருவரும் சீரடிக்கு செல்கிறார்கள். அங்கு சென்று பாபாவை புகழ்ந்து பாடுகிறார்கள். அவர்களுக்கு தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார் பாபா.
அவதார புருஷன்
ராமனாக, சிவனாக, முருகனாக, காட்சி தருகின்ற கலியுக அவதார புருஷராக பாபா இருப்பதை அவர்கள் தங்கள் பஜனை பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு பாபாவின் அற்புதம் குறித்து கவிஞர் பெர்னாட்ஷா பேசினார். நிறைவாக பக்தர்கள் அனைவரும் வரிசையாக வந்து சுவாமிகளை வணங்கி விபூதி பிரசாதம் பெற்றனர். அதன் பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாய் நகர் சாய்பாபா ஆலயத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் வந்து பாபாவை வணங்கி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Karaikudi Saibhaba temple Guruvara Pooja:(காரைக்குடி சாய்பாபா கோவில் குருவார பூஜை துளாவூர் ஆதினம் அருளாசி)