
சூர்யா ஜோடியாகிறார் திஷா பதானி
பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் பக்கா மாஸ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஹிந்தி நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும் தயாரிப்புக்கு நெருக்கமான வட்டாரம் இந்த தகவலை உறுதிபடுத்துகிறது. இதன்மூலம் பாலிவுட் நடிகையான திஷா பதானி, முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.
ஹிந்தியில் தோனி உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் அங்கு முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவர்தான் டான்ஸ் ஆடுவதாக இருந்தது. சம்பளம் அதிகமாக கேட்டதால் இவருக்கு பதிலாக சமந்தா அந்த பாடலில் ஆடினார்.
படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான பூஜையும் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.