புதுடெல்லி: மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கை, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், அதை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இந்தப் பிரச்சினை ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஆயுதமாக பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசை மிரட்டுவதாக மத்திய அரசு மீது முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாக கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியது:
மதுபானக் கடை உரிமம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திவருகிறது. டெல்லி, குருகிராம், சண்டிகர், மும்பை, ஹைதராபாத், லக்னோ, பெங்களுரூ உட்பட மொத்தம் 21 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.
மதுபானக் கடை உரிமம் முறைகேடு வழக்கில் கலால் ஆணையர் அர்வ கோபி கிருஷ்ணா, துணை ஆணையர் ஆனந்த் திவாரி, உதவி ஆணையர் பங்கஜ் பட்நாகர் மற்றும் மதுபான நிறுவன நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது, அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து புதிய மதுபானக் கொள்கை தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்துக்கு மதுபான வியாபாரி ரூ.1 கோடி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், வழக்கில் முதல் குற்றவாளியாக மணிஷ் சிசோடியா சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து சிசோடியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நான் நிரபராதி. மத்திய அரசின் விருப்பத்துக்கேற்ப சிபிஐ செயல்படுகிறது. உண்மை நீதிமன்றத்தில் வெளிவரும். இந்த வழக்கை பொறுத்தவரை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தற்போது நடக்கும் சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது. இப்போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற எனது நிலைப்பாட்டில் மீண்டும் உறுதியுடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வரவேற்பு
டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கூறும்போது, ‘சிசோடியா வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை தாமதமானது, ஆனால், வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே ஆக வேண்டும். இந்த சோதனை காங்கிரஸுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே’ என்றார்.
பாஜக கருத்து
பாஜகவின் தேசிய தகவல் தொடர்பு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கலால் கொள்கையில் டெல்லி அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதனால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நல்ல கொள்கை என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே? விசாரணை என்றவுடன் உடனடியாக அந்த கொள்கையை திரும்பப் பெற்றதன் காரணம் என்ன? கேஜ்ரிவால் நற்சான்றிதழ் வழங்கிய சத்யேந்திர ஜெயின் இன்னும் சிறையில்தான் உள்ளார். சிசோடியாவும் அந்த வரிசையில் இடம்பெறப் போகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.