புதுடெல்லி: காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக மோசமான விஷயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் மற்றும் 9 மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ம்தேதி திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ-650 மாத்திரைகாய்ச்சலுக்கு பயன்படுத்தப்படு கிறது. இந்த மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக நேரடி வரிகள் மத்திய வாரியம் (சிடிபிடி) கடந்த 13-ம் தேதி குற்றம் சாட்டியது.
இதனடிப்படையில், இந்திய மருந்துகள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரீக் கூறியதாவது:
500 மில்லி கிராம் வரையிலான மாத்திரைகளின் சந்தை விலையை ஒழுங்குப்படுத்த, மத்திய அரசின் விலை கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. ஆனால் 500 மில்லி கிராமுக்கு மேற்பட்ட மாத்திரைகளின் விலையை அந்தந்த மருந்து நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்ற முறை உள்ளது.
அதிக லாபத்தை உறுதி செய்ய டோலோ மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனம் 650 மி.கி. மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்கி உள்ளது தெரிய வருகிறது. இதற்கு மத்திய அரசு பதில் அளித்ததும், மேலும் பல உண்மைகளை இந்த நீதிமன்றத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு வழக்கறிஞர் சஞ்சய் பரீக் கூறினார்.
அப்போது நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘‘எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது கூட, நான் இந்த மாத்திரையை தான் சாப்பிட்டேன். மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு இலவசங்களை கொடுத்ததாகக் கூறப்படுவது மிகவும் மோசமான விஷயம். இது குறித்து நாங்கள் விசாரிக்கிறோம்’’ என்றார்.
10 நாட்களில் பதில்
மனுதாரர் கூறியுள்ள புகாருக்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே.எம். நடராஜ் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அதன்பின் மனுதாரர் தனது மறுப்பு அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 29-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.