தங்களுடைய திருமணத்தை பெரிதாக சுற்றத்தார் பேசி மெச்ச வேண்டும் என்ற போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்காகவே ஒவ்வோர் ஏற்பாடுகளையும் குடும்பத்தினரும் சரி, மணமக்களும் சரி கூடுதல் மென்கெடலோடு செய்கின்றனர். முதலில் இந்த மெனக்கெடலை திருமண அழைப்பிதழில் இருந்தே ஆரம்பிக்கின்றனர்.
தன்னுடைய திருமண அழைப்பிதழ் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக ஃபார்மாலிட்டிக்கு வீட்டில் மங்களகரமாக ஓர் அழைப்பிதழை அடித்து விட்டு, வேலை செய்யும் இடத்தில் கெத்தா, ஸ்டைலா ஒரு திருமண அழைப்பிதழை தயார் செய்கின்றனர்.
இன்னும் சிலர் கூடுதல் கிரியேட்டிவிட்டியோடு தாங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்றார்போலவே தங்களுடைய திருமண அழைப்பிதழை அச்சிட்டு கொள்கின்றனர்.
அப்படித்தான் ஒரு திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் எழிலரசன் என்பவர் தன்னுடைய திருமண அழைப்பிதழை மாத்திரையின் பின்பக்கம் உள்ள அட்டை போலவே வடிவமைத்துள்ளார்.
பொதுவாக மாத்திரை அட்டையின் பின்புறத்தில் மாத்திரையின் பெயர், டோஸ் எவ்வளவு, காலாவதியாகும் காலம், எச்சரிக்கை போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை அப்படியே திருமண அழைப்பிதழாக மாற்றி மருந்தின் பெயருக்கு பதில் தன்னுடைய பெயரையும், மணப்பெண்ணின் பெயரையும், மாத்திரையின் மூலப்பொருள்களுக்கு பதில், தங்கள் இருவரின் கல்வித் தகுதியும், மாத்திரை தயாரிக்கப்பட்ட நாள், போன்றவற்றில் திருமண நாள், மற்றும் எச்சரிக்கையை அனைத்து நண்பர்களும் உறவினர்களும் தவறாமல் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என சிவப்பு அச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் வைரலாகி வரும் இந்த அழைப்பிதழுக்கு கமென்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.