திண்டுக்கல்: தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடியில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார். திண்டுக்கல்லில் நேற்று தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.420 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் ஏழரை லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 21 லட்சம் உறுப்பினர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ளனர்.
17 நலவாரியங்களில் திருநங்கைகள் உள்பட பலர் உள்ளனர். இதுவரை 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் நேற்று 11,671 தொழிலாளருக்கு ஒரு கோடியே 97 லட்சத்து 41 ஆயிரத்து 641 ரூபாய் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட முதல்வர் சிறப்பாக அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி வருகிறார். வீடு இல்லாதவருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிட்டுள்ளார். அதற்காக ரூ.4 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார். தொழில்துறையில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக மாற்றுவது அவரது லட்சியமாக உள்ளது. அதிலும் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக வரவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு பேசினார்.