தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி ஒகேனக்கல்லில் நேற்று அவர் நடைப்பயணத்தை தொடங்கினார். 2வது நாளாக குறும்பட்டி டீக்கடை என்ற இடத்தில் இருந்து நடைபயண பரப்புரையை தொடங்கினார்.
சோலைக்கொட்டாய், நடுபட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஹள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர் வரை அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காவிரி ஆறு நுழையும் முதல் மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தில் இருந்து காவிரி ஆற்று தண்ணீரை தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருவதாக கூறினார்.
மழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலிலேயே கலந்து வீணாகக்கூடிய உபரி நீரை தருமபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏரி, குளங்கள், அணைகளை நிரப்பக்கூடிய தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தருமபுரி மாவட்ட மக்களுக்காகவும், விவசாயம் செழிக்கவுமே இந்த நடைபயண பரப்புரையை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். நாளை கம்பைநல்லூரில் தொடங்கி பொமிடில் தனது நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் நிறைவு செய்கிறார்.