கோழிக்கோடு: கேரளத்தில் பாலியல் வழக்கில் பெண்ணின் உடையை காரணம் காட்டி நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மற்றொரு பாலியல் வழக்கிலும் அந்த நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
கேரளத்தை சேர்ந்த 74 வயது மாற்றுத்திறனாளி எழுத்தாளர் சிவிக் சந்திரன். இவர் கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த புத்தக கண்காட்சியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோழிக்கோடு அமர்வு நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் கடந்த 2-ம் தேதி முன்ஜாமீன் வழங்கினார்.
இது தொடர்பாக நீதிபதி கிருஷ்ணகுமார் தனது உத்தரவில், “74 வயதான மாற்றுத்திறனாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என பெண் தரப்பு கூறுவதை நம்ப முடியவில்லை. எழுத்தாளர் தரப்பில் அளிக்கப்பட்ட புகைப்பட ஆதாரம் அடிப்படையில், புகார் அளித்த பெண் அணிந்துள்ள ஆடை பாலியல் எண்ணத்தை தூண்டும் வகையில் இருப்பது தெரியவருகிறது. எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டப்பிரிவு 354-ஏ பொருந்தாது” என்று கூறியிருந்தார்.
பெண்களின் உடையை காரணம் காட்டி பாலியல் வழக்கில் நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் அதே நாளில் சிவிக் சந்திரனுக்கு எதிரான மற்றொரு பாலியல் வழக்கிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் தனது உத்தரவில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த புத்தக கண்காட்சி ஒன்றில் எழுத்தாளர் சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தலித் பெண் எழுத்தாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கிலும் சந்திரனுக்கு கடந்த 2-ம் தேதி முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் தனது உத்தரவில், “குற்றம் சாட்டப்பட்டவர் (சந்திரன்) தனது பெயருடன் சாதிப்பெயரை குறிப்பிட மறுத்ததை அவரது எஸ்எஸ்எல்சி புத்தக நகல் காட்டுகிறது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. சாதிய அமைப்புக்கு எதிராகப் போரடி வருகிறார். சாதியற்ற சமூகத்துக்காக எழுதி வருகிறார். அப்படியிருக்கையில் அந்தப் பெண் எழுத்தாளர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தும் அவரது உடலை சந்திரன் தொடுவார் என்பது மிகவும் நம்பமுடியாதது” என்று கூறியுள்ளார்.