திருச்சி: திருச்சி மத்திய சிறை முகாமில் 250க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி 60 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர். செல்போன்களை திரும்ப ஒப்படைக்க கோரி கைதிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 4 பேர் தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாட்டை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட்டில் வந்தவர்கள், விசா முடிந்தும் தங்கள் நாடுகளுக்கு செல்லாதவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 110 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளது.
இதனால் அவர்களது வழக்குகள் முடியும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறுநாள் சிறப்பு முகாமில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முகாமில் தங்கியுள்ள நபர்களின் வங்கி கணக்குகளில் சட்டவிரோதமான பரிவர்த்தனை மற்றும் வெளியே உள்ள கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். இந்த சோதனை யில் 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை சிறப்பு முகாமில் போதை பொருட்கள், ஆயுதங்கள், பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்ரீ தேவி, அன்பு, சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 6 மணி முதல் 11.30 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முகாமில் இருந்து 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அந்த போன்கள் மூலம் யார் யாரிடம் பேசினார்கள், எங்கிருந்து அழைப்புகள் வந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது கைதிகள், அந்த செல்போன்கள் மூலம் தான் குடும்பத்தினருடன் பேசி வருகிறோம். பறிமுதல் செய்த செல்போன்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென கைதிகள் ரமணன், சசிதரன், தீபன், தர்மகுமார் ஆகியோர் முகாமில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.