நெல்லை : ‘திருமா மடியில் மறைந்தால் அதுவே எனக்குப் பெருமை’ என கடந்தாண்டு ஒரு மேடையில் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் பேசியிருந்த நிலையில், நெல்லை கண்ணனின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்று வழியனுப்பி வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
நெல்லை கண்ணன் கனிந்த காலகட்டத்தில் பேசிய பேச்சுக்கு மிகுந்த மதிப்பளித்து விசிக தலைவர் திருமாவளவன், நெல்லை கண்ணனின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், எழுத்தாளருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) நேற்று முன்தினம் காலமானார்.
நெல்லை கண்ணன் மறைவு
திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன் 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தவர். காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்ட நெல்லை கண்ணன், காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர். அரசியல் ஆளுமையாகவும், தமிழ் அறிஞராகவும் திகழ்ந்த அவரது மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்தனர். நெல்லை கண்ணனின் உடல் நேற்று பிற்பகலில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்திய திருமா
நெல்லை கண்ணனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, நெல்லை கண்ணனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நெல்லை கண்ணன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு; எனது பாதுகாப்பை இழந்ததாக கருதுகிறேன். அரசியல் தளத்தில் நெல்லை கண்ணன் சந்திக்காத ஆளுமைகளே கிடையாது. நெல்லை கண்ணனின் இழப்பு தமிழ் சமுதாய இலக்கியத் தளத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு எனத் தெரிவித்தார் திருமாவளவன்.
விசிக மேடையில்
சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில், நெல்லை கண்ணனுக்கு ‘காமராசர் கதிர்’ விருது வழங்கப்பட்டது. இன்த விருது விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கண் கலங்கிப் பேசியிருந்தார். ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோரிடம் நெகிழ்ச்சியாகப் பேசினார் நெல்லை கண்ணன்.
திருமா மடியில் மறைந்தால் பெருமை
அப்போது, “இத்தனை ஆண்டும் என்னைப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் எல்லாம் என்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவமதித்தனர். என்னை மனிதனாக மதித்து, எனக்கு மரியாதை செய்யும் தம்பி திருமா மடியில் மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி அடைவேன். திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. இனி, இறுதி மூச்சுவரை திருமாவே என் பாதுகாவலன்.” எனப் பேசி இருந்தார்.
திருமா இரங்கல்
திருமாவளவன் விடுத்த இரங்கல் அறிக்கையிலும், “தம்பி திருமாவளவனை விட்டு விடாதீர்கள்; அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த அளவுக்கு என் மீது அவர் பாசம் கொண்டிருந்தார் என்பதை விட நம்பிக்கை வைத்திருந்தார் என்பதையே உணர்ந்தேன்.” என உருக்கமாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் நெல்லைக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலியும் செலுத்தியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.