திருவாடானை: திருவாடானையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தி வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை பேருந்து நிலையம் அருகில் மிகவும் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் – தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மேலும் இந்தக் கோவிலின் அர்ச்சகரான கிட்டு குருக்கள் (எ) முத்துச்சாமி குருக்களின் மூதாதையர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் காரப்படாகை என்னும் இடத்திலிருந்து பிடி மண் கொண்டு வந்து கோவிலை உருவாக்கியதாகவும், தற்சமயம் அந்த அர்ச்சகரின் வாரிசுகள் ஏதேனும் ஒரு சில விஷேச நாட்களில் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக இந்தக் கோவில் பராமரிப்பு இன்றி சேதமடைந்து புனரமைக்கப்படாமல் உள்ளதால் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் திருவாடானையில் உள்ள தேரோடும் நான்கு வீதிகளிலும் சுமார் 5க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவிலை உருவாக்கி விஷேச நாட்களில் பூஜைகளும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் ஆவணி மாதம் வரை திருவிழாவும் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோவில் சேதமடைந்து பாழடைந்து காணப்படுவதால் கோவில் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் திருவிழா நடத்த முடியவில்லை. ஆகையால் மிகவும் பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த மாரியம்மன் கோவிலை புனரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும். பொது வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் கூறுகையில், இப்பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமகா மாரியம்மன் கோவில் சுவர்கள் நீண்ட காலமாக சேதமடைந்து பாழடைந்து பொதுமக்கள் வழிபாடு செய்ய முடியாமல் பூட்டப்பட்டு உள்ளது. மேலும் இந்த மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்று சக்தி வாய்ந்ததால் இப்பகுதி முன்னோர்கள் ஆதிகாலத்தில் இருந்து வழிபட்டு வந்துள்ளனர். நாளடைவில் கோவில் பராமரிப்பு இன்றி பாழடைந்து விட்டதால் தேரோடும் நான்கு முக்கிய வீதிகளிலும் உருவான 5க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களில் மட்டும் வழிபாடு செய்து திருவிழா நடத்துகின்றனர். இதேபோல் இந்த மாரியம்மன் கோவிலையும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்து குடமுழுக்க விழா நடத்தி பொதுமக்களின் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தினசரி இரண்டு கால பூஜை நடத்த வேண்டும் என்றார்.பக்தர்கள் கூறுகையில், பழங்கால கோயில் அலங்கோலமாக கிடப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கோயிலை மீண்டும் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பழங்கால கோயிலை வரும் தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும் என்றனர்.