இயக்குநர் இமயம், சிகரம், பாக்யராஜ், விசு என திரைக்கதைக்காக பெயர் பெற்ற தமிழ் திரையுலகம் வலுவான திரைக்கதை இல்லாமல் தள்ளாடுகிறது. போதாத குறைக்கு பான் இந்தியா படம் என வன்முறை பட்ஜெட் படங்கள் வேறு. மீளுமா திரையுலகம்.
தமிழில் பல வலுவான திரைக்கதை உரையாடல் ஆசிரியர்கள் இருந்தனர், தற்போது இயக்குநர்களே அத்தனையயும் தீர்மானிக்கின்றனர் இதனால் வலுவில்லாத படங்கள் வருகின்றன என இயக்குநர் வசந்தபாலன் போன்றோரே விமர்சிக்கின்றனர்.
திரைக்கதை இல்லாமல் இயக்குநர்களே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள் என திரைக்கதை மன்னன் பாக்யராஜ் குற்றம் சாட்டியிருந்தார். கலை மக்களுக்கே, அது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதே இவர்கள் விமர்சனத்தின் சாராம்சம்.
சினிமா மூலம் மக்கள் மனதை இடம் பிடித்த சாதனையாளர்கள்
இயல், இசை, நாடகம் என பல வடிவங்களில் நாடகக்கலை வெவ்வேறு வடிவங்களை கடந்து சினிமா இண்டஸ்ட்ரி என பெரிய வடிவமாக உள்ளது. சினிமாவில் பல நல்ல கருத்துகளை சொல்லி அதன் மூலம் மக்கள் அபிமானம் பெற்று ஆட்சியைப்பிடித்த எம்ஜிஆர், பல முற்போக்கு வசனங்களை எழுதி புகழ்பெற்ற கருணாநிதி என கலையை பயன்படுத்தியவர்கள் உண்டு. நல்ல கருத்துகளைச் சொன்ன எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் என பலர் இருந்தனர். புராண கதைகள், வரலாற்று காவியங்கள், குடும்ப கதைகள் எடுத்த இயக்குநர்கள் கதாசிரியர்கள் தமிழக திரையுலகில் உண்டு.

டெக்னிக்கலாக வளர்ந்து திரைக்கதைகளில் கோட்டைவிடும் தமிழ் திரையுலகம்
காலம் மாறும்போது சினிமா வளர்ந்தது. அதன் வடிவங்கள் மாறியது. முன்னரெல்லாம் எது மிகப்பெரிய தவறு என கருதப்பட்டதோ அதெல்லாம் தற்போது சாதாரண விஷயமாக சினிமாவில் உள்ளது. சினிமாவின் வளர்ச்சியை மக்கள் ரசிக்க ஆரம்பித்துள்ளார்கள். டெக்னிக்கலாக மிகப்பெரிய வளர்ச்சியை சினிமா அடைந்துள்ளது. சினிமாவின் வியாபார எல்லையும் பெரிதாக விரிவடைந்துவிட்டது. ஆனால் தமிழ் சினிமா முதல் இந்திய சினிமா வரை அடிப்படையாக இருந்த திரைக்கதை, வலுவான கதையமைப்பு தற்போது காணாமல் போய்விட்டது என்கிற விமர்சனத்தை மறுக்க முடியாது.

திரைக்கதையில் அன்றும் இன்றும் கவனம் செலுத்து மலையாள பட உலகம்
மலையாள திரைப்படங்கள் மட்டுமே திரைக்கதைகளை வலுவாக நம்பி பட்ஜெட்டைப்பற்றி கவலை கொள்ளாமல் சிறிய பட்ஜெட்டில் படம் எடுத்து வெற்றி பெறுகிறார்கள். தமிழ் சினிமாவில் வலுவாக இருந்த திரைக்கதை அமைப்பு முறை காணாமல் போய்விட்டது. நம்ப முடியாத காட்சிகளையும், கடுமையான வன்முறை, ஆக்ஷன் காட்சிகளையும், இளம் நடிகைகளின் கவர்ச்சியையும், குத்து பாடல்களையும் நம்பி படம் எடுக்கிறார்கள். ஒரு சண்டைக்காட்சிக்காக செலவிடப்படும் தொகையில் ஒரு நல்ல படத்தை முழுதுமாக எடுத்துவிட முடியும் என்கிற அளவில் பணம் வாரி இரைக்கப்படுகிறது என்ற விமர்சனத்தை மறுக்க முடியாது.

காதில் ஒரு கூடை பூ வைக்கும் இளம் இயக்குநர்கள்
தெலுங்கு சினிமாவில் லாஜிக் மீறல்கள் சாதாரணமாக நடக்கும். என்னடா தெலுங்கு படம் மாதிரி எடுத்து வச்சிருக்கேன்னு லாஜிக் இல்லா படங்களை ரசிகர்களே சில சமயம் கலாய்ப்பார்கள். காரணம் நடைமுறைக்கும், படக்காட்சிகளுக்கும் சம்பந்தமே இருக்காது. சாதாரணமாக நட்ட நடு சாலையில் பொதுமக்கள் முன் 10 கொலைகள் செய்வார்கள் வில்லன் ஆட்கள், கையில் மிஷின் கன் வேறு இருக்கும். ஆனால் போலீஸ் மருந்துக்கூட வராது. சண்டைக்காட்சிகளில் வில்லன்கள் குரூப் மோதி சாவார்கள், மறுநாள் எந்த வழக்கும் இருக்காது. இது சினிமா நியதி ஆகிவிட்டது. இப்போது இந்த நோய் தமிழ் சினிமாவிலும் தொற்றிக்கொள்ள தொடங்கிடுச்சு. இது அதிகரித்து ஹீரோ போர் விமானத்துடன் அண்டை நாடு போய் வருவது வரை நகைச்சுவைக்காட்சியாக மாறிவிட்டது. உலக நாயகன் கமல்ஹாசனே பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டுக்காக காதில் பூச்சுற்ற கிளம்பிவிட்டார், விஜய், அஜித் சொல்லவே வேண்டாம் வலிமைக்கும், பீஸ்டுக்கு சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களே போதும்.

எம்ஜிஆர், சிவாஜி வன்முறைக்கதைகளை நம்பியா ஜெயித்தார்கள்
இதற்கு முழு முதல் காரணம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டுக்காக கண்டதையும் எடுப்பது, உணர்ச்சித்தூண்டல் அங்கு லாஜிக் இருக்காது. திரைக்கதை ஹூஹும் மருந்துக்கூட இருக்காது. ஹீரோ தனது ஐபிஎஸ் மகனுடன் வரும் போலீஸார் 5,6 பேரை சுட்டுவிட்டு மறுநாள் டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருப்பார். மஹான் படத்தில் வரும் காட்சி இது. குறும்படம் எடுத்து பெயர் பெற்ற கார்த்திச் சுப்புராஜ் எடுத்த காட்சி. இதுபோன்ற லாஜிக் மீறல்களை கேட்கும்போது சினிமாவை சினிமாவாக பாருன்னு நமக்கு புத்தி சொல்வார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஆரம்ப கால ரஜினி, கமல் எல்லாம் இப்படிப்பட்ட படத்திலா நடித்தார்கள் என்று கேட்டால் பதில் இருக்காது.

ஹீரோக்களே தங்களிஷ்டப்படி இயக்குநரை தீர்மானிக்கும் நிலை
வலுவான திரைக்கதை இல்லை, கதாசிரியர்களே இல்லை, இயக்குநர்களை ஹீரோக்கள் தேர்வு செய்கிறார்கள் அவ்வாறு செய்யும்போது லாஜிக்கே இல்லாமல் போகுது, கண்டபடி எடுக்கிறார்கள், ஹீரோக்களுக்கு ஏற்ப இயக்குநர் தனது திரைக்கதை, காட்சி அமைப்புகளை அட்ஜெஸ்ட் செய்கிறார், சில இடங்களில் ஹீரோக்களே இயக்குகிறார்கள். இப்படி போனால் படம் எப்படி முழுமையான படமாக இருக்கும் என்கிற விமர்சனம் எங்கு போனாலும் உண்டு. “திரைக்கதை எழுதும் கதாசிரியர்களே இல்லை, இயக்குநர்களே தங்களிஷ்டத்திற்கு எதையாவது எடுத்து கதை திரைக்கதைன்னு போடுகிறார்கள்” என இயக்குநர் வசந்தபாலன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

பக்யராஜின் விமர்சனம்
திரைக்கதைக்கு இந்திய அளவில் புகழ் பெற்ற பாக்ய்ராஜும் இதே கருத்தை சமீபத்தில் சொல்லியிருந்தார். திரைக்கதையில் வலுவாக கவனம் செலுத்தும், நகைச்சுவை உணர்வுள்ள பல நல்ல படங்களை கொடுத்த கமல்ஹாசன்கூட வன்முறையை மட்டுமே கொண்டுள்ள டார்க் மோடு படத்தை கொடுத்துவிட்டு கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே பல வலுவான கதையமைப்பு கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் பல வெளியாகிறது. ஆனால் தியேட்டர் கிடைப்பதில்லை. ஓடிடி தளம் இல்லாவிட்டால் அவைகள் வெளிவராமலே போயிருக்கும்.

ஆட்டத்தை திருப்ப ஒரு சாதனையாளர் வருவார்
இன்று பெரிய பட்ஜெட், பான் இந்தியா என வன்முறைகளை நம்பி படம் எடுப்பவர்கள் வலுவில்லாத கதைக்களனை வைத்து அதிக நாட்கள் காலம் தள்ள முடியாது. லாஜிக் இல்லாமல் மேஜிக்கை வைத்து படம் பண்ணுவதில் ஒருவர் தோல்வியடைந்தால் அது வரிசையாக அடுத்தடுத்த படங்களின் தோல்வியில் போய் முடியும். தமிழ் சினிமாவின் தவறான ஆட்டம் ஒவ்வொரு முறையும் மேலோங்கும்போது யாராவது ஒரு சாதனையாளரால் அது காப்பாற்றப்பட்டு திருப்பப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வலுவான திரைக்கதைகளை, காட்சி அமைப்புகளை, ஹீரோக்கள் தீர்மானிக்க முடியாத ஹீரோக்களை தீர்மானிக்கும் தகுதியான இயக்குநர்களை கொண்டதாக அமையும் காலம் வரும் மீண்டும் அது நிகழும்.