நாட்டைப் பற்றிய பொறுப்பில் இருந்து அனைவரும் விலகியிருந்த வேளையில், நாட்டைப் பற்றி சிந்தித்து, அதன் பாரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, மகா சங்கத்தினரின் முழுமையான ஆசிர்வாதம் நிச்சயமாகக் கிடைக்குமென்று, ருவன்வெலி சேய விகாரை, சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து தரப்பு, ரஜரட்ட நுவர கலாவியே பிரதான சங்கநாயக்க வண. பல்லேகம ஹேமரதன தேரர் தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர ருவன்வெலி மஹா சேய விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், விஹாராதிபதி தேரரை நேரில் சென்று சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர், விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நலன்களை விசாரித்ததுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அங்கு உபதேசம் வழங்கிய தேரர், நாடு சகல அம்சங்களிலும் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள வேளையில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டிற்காக ஜனாதிபதி அவர்கள் எடுக்கும் அனைத்து சரியான தீர்மானங்களுக்கும் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கும் எனவும், அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய திறமையான மற்றும் சரியான குழுக்களைத் தெரிவு செய்து, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களை ஒரே இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர், லங்காராம மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள், லங்காராமாதிபதி வடமத்திய மாகாண பிரதம நீதிமன்ற சங்கநாயக வண. ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் கொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு, நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் பலம் இருப்பதாக, தேரரின் அனுசாசன உரையில் குறிப்பிட்டார்.
நாட்டைப் பொருளாதார ரீதியில் மீட்டெடுக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும், அண்டை நாடுகளை பகைத்துக்கொண்ட கடந்த கால தவறை சரிசெய்து பலமான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும், அரச சேவையை அமுல்படுத்துவதில் குறைவாகப் பேசக்கூடிய, அதிகம் உழைக்கக்கூடிய அதிகாரிகள் குழுவொன்றை தமது அருகில் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அவர்களிடம் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் தூபாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், விகாராதிபதி வண. கஹல்லே ஞானிந்த நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
அங்கு சமயக்கிரியைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களுக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.
பின்னர், மிரிசவெட்டிய ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் , விகாரையின் விகாராதிபதி வண. ஈத்தலவெடுனு வெவே ஞானதிலக நாயக்க தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அங்கு விசேட அனுசாசன உரை நிகழ்த்திய தேரர், நாடு எதிர்நோக்கும் சவால்களை அச்சமின்றி ஏற்றுக்கொண்டு நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அனைத்துத் தரப்பினரும் முழு மனதுடன் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கட்சி, நிறம், சாதி, மத வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்றும், மனசாட்சிப்படி இது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள தேசியப் பொறுப்பு என்றும் தேரர் வலியுறுத்தினார்.
வடமத்திய மாகாண மக்கள் நீண்டகாலமாக அனுபவித்து வரும் சிரமங்கள் குறித்தும் தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். “வடமத்திய மாகாண மக்கள் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற போதிலும், தேசிய வளங்களின் அநுகூலங்கள் அந்த மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பது ஒரு கவலையான விடயமாகும். அவர்களில் பலர் இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேரர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-20