சென்னை: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்சமயம் படங்களை தயாரிப்பது, நடிப்பது என்று பிசியாக இருக்கிறார்.
பீஸ்ட் திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததால் அடுத்து நெல்சன் இயக்கப் போகும் ரஜினிகாந்த் படத்திற்கு கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
இந்நிலையில் தெனாலி திரைப்படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
தெனாலி
அவ்வை சண்முகி என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் மற்றும் ரவிக்குமார் கூட்டணி அமைத்த படம் தான் தெனாலி. ‘வாட் அபௌட் பாப்’ என்கிற ஆங்கில திரைப்படத்தின் தழுவலாக இந்தத் திரைப்படம் உருவானது. இந்தியன் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரகுமான்.

கமலின் ஆலோசனை
இந்தப் படத்தை எந்த தயாரிப்பாளருக்கு கொடுக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்துபோது நீங்களே தயாரித்துவிடுங்கள் என்று கமல்ஹாசன் ஆலோசனை கூற ரவிக்குமாரை அந்தப் படத்தை தயாரித்திருந்தார். சமீபத்தில் ரவிக்குமார் தயாரிப்பில் வெளிவந்த கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் புரமோஷனில் கூட கமல்ஹாசன் சாரால்தான் நான் ஒரு தயாரிப்பாளர் ஆனேன் என்று அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார். இதே போல தெனாலி திரைப்படத்தில்தான் முதன்முதலில் உலக நாயகன் என்கிற பட்டத்தை கமல்ஹாசனுக்கு சூட்டினார் கே.எஸ்.ரவிக்குமார்.

டைட்டில் கார்டு
தெனாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பின்னர் ஒருநாள் கமல்ஹாசன் வீட்டிற்கு கேமராவை எடுத்துக்கொண்டு ரவிக்குமார் சென்றாராம். எதற்கு என்று கமல்ஹாசன் கேட்க ஒரு ஷாட் எடுக்க வேண்டும் என்று அவர் சொல்ல, படமே முடிந்துவிட்டதே நான் வேறு தாடியை எடுத்து விட்டேன் இப்போது என்ன ஷாட் எடுப்பீர்கள் என்று கமல் கேட்டதற்கு இது படத்தில் உங்கள் பெயர் போடும்போது நான் பயன்படுத்தப் போகும் ஷாட் என்று ரவிக்குமார் கூறியுள்ளார். எதற்காக இதெல்லாம் சாதாரணமாக பெயர் போடலாமே என்று சொன்னதற்கு இல்லை புதுமையாக ஏதாவது உங்களுக்கு செய்ய வேண்டும் என்று கூறி கண்களுக்கு மட்டும் ஷாட் வைத்து படம்பிடித்து சென்றாராம்.

ஆழ்வார்பேட்டை டூ ஆண்டவர்
படத்தின் டைட்டில் கார்டில் கமல்ஹாசன் அவர்களின் வீடு காட்டப்பட்டு அங்கிருந்து ஸூம் அவுட் ஆக ஆக ஆழ்வார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா என்று அனைத்து பகுதிகளும் காட்டப்பட்டு கடைசியாக உலக உருண்டை காட்டப்படும். அந்த உருண்டை கமலஹாசன் அவர்களின் கண்களாக மாறி அவரது கண்கள் டைட் க்ளோசப்பில் காட்டப்பட கமல்ஹாசன் புன்னகைப்பார். அப்போது உலகநாயகன் கமல்ஹாசன் என்கிற டைட்டில் தோன்றும். இதே டைட்டில் கார்டைதான் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலும் லோகேஷ் பயன்படுத்தியிருப்பார்.