தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் 100வது நாளான மே 22ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது, திடீரென அங்கு கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி 2 பெண் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிமுக ஆட்சிக்கு கரும்புள்ளியாகவே அமைந்ததாக கடும் விமர்சனம் வைக்கப்பட்டன.
அதே சமயம், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாக அவர் பதிலளித்தார்.
முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் பெரும் விவாத பொருளாக மாறியது. இதற்கிடையே இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிப்பதற்கு அப்போதைய அதிமுக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்த விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ம் தேதி தனது அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அளித்தது. சுமார் 3000 பக்கங்களை கொண்ட அறிக்கையில் என்னென்ன பரிந்துரைக்கப்பட்டு உள்ளது? என்பது பற்றி இன்னும் தமிழக அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் உள்ளதாக முன்னணி ஆங்கில இதழில் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, துப்பாக்கி சூடு தேவையில்லாமல் நடத்தப்பட்டது. கலைந்து ஓடிய மக்களை சுட்டு கொலை செய்துள்ளார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளார்கள்.
அப்போது, மாவட்ட கலெக்டராக இருந்த வெங்கடேஷ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு இதுதொடர்பாக இன்னமும் வாய் திறக்காமலேயே உள்ளது. எனவே இனியும் கால தாமதம் செய்ய முடியாது என்பதால் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது குறிப்பிட்ட நாளிதழில் வெளியான தகவல் உண்மை என்பது தெரிய வருகிற பட்சத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.