பெய்ஜிங்: தைவானைச் சுற்றி வளைக்கும் வகையிலான நடவடிக்கையில் சீனா மிகத் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த மாதம் கிளம்பிய தைவான் விவகாரம் இன்னும் கூட முடிந்ததாகத் தெரியவில்லை. சீனாவின் நடவடிக்கை தைவான் மட்டுமின்றி தென்கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தைவானைப் பொறுத்தவரைச் சீனா அது தனது நாட்டின் ஒரு பகுதி என்றே கூறி வருகிறது. அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்கு இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.
தைவான்
தைவான் மக்களின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரிக்கின்றன. தங்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், அமெரிக்கா டாப் அதிகாரிகள் தைவான் செல்வது வழக்கம். இந்தச் சூழலில் கடந்த மாதம் முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றார். இதனால் கடும் கோபமடைந்த சீனா, நான்சி பெலோசி அங்கு இருக்கும் போதே போர்ப் பயிற்சி என்ற பெயரில் தைவான் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்தது.
நான்சி பெலோசி
நான்சி பெலோசி தைவானில் இருந்து திரும்பிய பின்னரும் கூட, அங்குத் தொடர்ச்சியாகப் பிரம்மாண்ட போர்ப் பயிற்சிகளைச் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பயிற்சி என்ற பெயரில் சீனா போருக்குத் தயாராகி வருவதாகத் தைவான் பரபர குற்றச்சாட்டைச் சமீபத்தில் முன் வைத்து இருந்தது. இந்நிலையில், தைவான் பகுதியில் சீனாவின் ஜெட் விமானங்கள், கடற்படை கப்பல்கள் நுழைந்துள்ளது.
ராணுவ விமானங்கள்
மொத்தம் 21 சீனா ஜெட் விமானங்கள், ஐந்து கடற்படைக் கப்பல்கள் தைவான் பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சீனா ராணுவம் இந்த அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. நான்கு குண்டு வீசும் விமானங்கள், இரண்டு போர் விமானங்கள் உட்பட பல போர் விமானங்கள் அப்பகுதியைக் கடந்துள்ளது.
அச்சம்
அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி வருகைக்குப் பின்னர் தைவானை சுற்றி சீனாவின் நடவடிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, தைவானையும் சீனாவையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியில் மட்டும் 51 சீனப் போர் விமானங்கள் கடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் எங்குத் தைவான் மீது அமெரிக்கா முழு வீச்சிலான போரை ஆரம்பிக்குமோ என்ற அச்சம் அதிகரித்து உள்ளது.
ஆத்திரமூட்டும் அமெரிக்கா
நான்சி பெலோசி வருகையால் ஏற்பட்ட பதற்றமே இன்னும் முடியாத நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழு தைவானுக்குச் சென்றது. இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது. அதன் பின்னரே தைவானைச் சுற்றி சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்தது.
அச்சம்
ஏற்கனவே, கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் முடியவில்லை. இதனால் இரு நாடுகள் மட்டுமின்றி உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தச் சூழலில் சீனாவும் இப்படித் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் சரியானதாக இருக்காது எனச் சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும், இது அடுத்த உலகப் போரைத் தொடங்கும் ஆபத்தும் உள்ளதாக எச்சரித்தனர்.