
முதன்முறையாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சுரேஷ்கோபி
மலையாள திரையுலகம் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் மூலமாகத்தான் முதன்முறையாக 50 கோடி வசூல் என்கிற சாதனையை சொந்தமாக்கியது. அதன்பிறகு பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போதெல்லாம் குறைந்தபட்சம் 50 கோடி வசூல் கிளப்பிலாவது இணைய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
அந்தவகையில் மோகன்லாலை தொடர்ந்து பிரித்விராஜ், நிவின்பாலி, மம்முட்டி, துல்கர் சல்மான் என பலரும் அவ்வப்போது 50 கோடி வசூல் கிளப்பில் தங்களது படத்தை இணைத்து சாதனையில் பங்கெடுத்துக் கொண்டனர். அதே சமயம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராக, ஆக்சன் நாயகனாக வலம் வந்த சுரேஷ்கோபி, இதுபோன்ற சாதனைகள் நிகழ்ந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியல் பக்கம் தனது பார்வையை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீண்டும் திரையுலகில் முன்பு போல கவனம் செலுத்தி நடித்து வரும் சுரேஷ்கோபி, இப்போது தானும் முதன்முறையாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளார். சமீபத்தில் பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்சனில் சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படம் 50 கோடி வசூலித்துள்ளதுடன் தற்போதும் பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் சுரேஷ்கோபி மீண்டும் பார்முக்கு திரும்பி விட்டார் என அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.