சென்னை: வெற்றி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘ஜீவி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
விஜே கோபிநாத் இயக்கியிருந்த இப்படத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதியிருந்தார்.
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனம் இதோ.
திரைக்கதையில் அசத்திய ஜீவி
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் 2019ல் வெளியான ‘ஜீவி’ திரைப்படம், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என வித்தியாசமாக உருவாகியிருந்தது. மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் பாபு தமிழ் எழுதியிருந்த திரைக்கதை, ஜீவி படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்தது. வெற்றி, கருணாகரன், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
எதிர்பார்க்கப்பட்ட ஜீவி 2
ஜீவி படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் இரண்டாம் பாகமும் அதே கூட்டணியில் உருவானது. முதல் பாகத்திற்கு திரைக்கதை எழுதிய பாபு தமிழ் மட்டும், இப்படத்தில் இணையவில்லை. விஜே கோபிநாத் இரண்டாம் பாகத்தின் கதை, திரைக்கதையை எழுதியதோடு, படத்தையும் இயக்கியுள்ளார். ஜீவி படத்தில் கிடைத்த புதுமையான அனுபவமும் பரபரப்பான ட்விஸ்ட்களும், 2ம் பாகத்தையும் அதிகம் எதிர்பார்க்க வைத்தது.
ஜீவி 2 கதை இதுதான்
முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘ஜீவி 2’, வெற்றியின் திருமணத்திற்குப் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. தொடர்பியலும், முக்கோண விதியும் முடிவுக்கு வந்துவிட்டதாக வெற்றி நினைக்கும் நேரத்தில், ஹரி என்ற புதிய நண்பன் அவருக்கு அறிமுகமாகிறார். அதேநேரம் தங்கையின் மகளுக்கு கண் பார்வையில் குறைபாடு இருப்பது தெரியவருகிறது. அதேபோல் வெற்றியின் மனைவியும் ஏற்கனவே கண் பார்வை இல்லாமல் அவதிப்படுகிறார்.
திரும்பி வந்த பரம்பரை நகை
பணம் அதிகமாக தேவைப்படுவதால், வேறு வழியில்லாமல் ஹரியின் வீட்டில் இருந்து நகைகளை திருடுகிறார் வெற்றி. ஆனால், மறுநாளே ஹரி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அதோடு ஹவுஸ் ஓனர் ரோகிணியின் கணவரும் உயிரிழக்கிறார். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் உறையும் வெற்றி, மீண்டும் முக்கோண விதியில் சிக்கியிருப்பதை உணர்கிறார். முதல் பாகத்தின் முடிவில் ஹவுஸ் ஓனர் ரோகிணி வீட்டில் திருடும் நகைகளை, பஸ்ஸில் தவறவிடுவார் கருணாகரன். அதே நகையைதான் ஹரி வீட்டில் மீண்டும் திருடுகிறார் வெற்றி. வெற்றியின் பரம்பரை நகையான இது, இப்படி ஏன் அலாவூதீன் அற்புத விளக்காக சுற்றுகிறது என்பதில் தான் பல புதிர்கள் உள்ளன.
இன்னும் முடிவுக்கு வராத தொடர்பியல்
அதேநேரம் ஹரியை கொலை செய்தது யார் என்பதும் தெரியவருகிறது. ஆனாலும், தொடர்பியலுக்கும் முக்கோண விதிக்கும் முடிவு தெரியவில்லை, அதற்காக இன்னும் 4 புதிய கேரக்டர்கள் அறிமுகமாவதோடு இரண்டாம் பகம் முடிகிறது, 3ம் பாகத்துக்கும் லீட் கொடுத்துள்ளார் இயக்குநர். முதல் பாகத்தை விடவும் விறுவிறுப்பான திரைக்கதையையும் ட்விஸ்ட்களையும் எதிர்பார்த்தால், 2ம் பாகம் ரொம்பவே அடி சறுக்கியுள்ளது. படத்தின் நீளம் குறைவாக இருந்தும், திரைக்கதையின் வேகம் அயர்ச்சியைத் தருகிறது.
நடிகர்கள் தேர்வில் குறைகள்
ஜீவி 2 படத்தில் நடிகர்களின் தேர்வும் செயற்கைத்தனமாக இருக்கிறது, அதேபோல் சிலரின் நடிப்பும் சொல்லும்படியாக இல்லை. அதிலும் குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நடிகர் நாசரின் தம்பி கேரக்டர் சுத்தமாக எடுபடவில்லை. சீரியல் நடிகர்களுடன் போட்டிப்போடும் அளவிற்கு, சிலர் நடித்துள்ளது, படத்தின் மைனஸ் எனலாம். இந்த குறைகள் எல்லாம் ஜீவி 3ம் பாகத்தில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.