அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இன்று கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் வந்து அவரைச் சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனநாயக ரீதியில் சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுக-வை நான்கரை ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்து விட்டு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்ற நினைக்கிறார். கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை தேர்தல் ஆணையமே அங்கீகரித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக பொதுக்குழு கூட்டத்தில் செல்லாது என அறிவித்துவிட்டு இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னைத் தானே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்துகொண்டார்.
ஆனால் அதனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தபோதிலும் இ.பி.எஸ் உட்பட அனைவரும் மீண்டும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என ஓ.பி.எஸ் பெருந்தன்மையாக அழைப்பு விடுத்தார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்-ஸை துரோகி என்றும், பதவி ஆசை பிடித்தவர், உழைக்காமல் பதவி கேட்கிறார் என குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.

உண்மையிலேயே ஓ.பி.எஸ் உழைத்ததால்தான் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரு முதலமைச்சராக இருந்தவரை மற்ற ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்தது ஓ.பி.எஸ்-ஸை தவிர வேறு யாரும் கிடையாது. மேலும் கடைசியாக நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் உறுப்பினர்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஓ.பி.எஸ்-ன் ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருப்பவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கவில்லை என்றால் அனைவரும் சசிகலா பக்கம் சென்று விடுவார்கள் என்று கூறி, தனது ஆதரவாளர்களாக வைத்து கொண்டு தற்போது கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால் தற்போது இருக்கும் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தித்தால் தெரியும் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்று.

மூன்று முறை முதலமைச்சர் பதவியைக் கொடுத்த பிறகும் அதனை ஓ.பி.எஸ் மீண்டும் திரும்பத் தந்தார். ஆனால் இன்றைய நிலையில் ஜெயலலிதாவே முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டு திரும்பக் கேட்டால் அவர் தர மாட்டார். ஜெயலலிதாவிற்கே எடப்பாடி துரோகம் செய்திருப்பார். மேலும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை திருடிச் சென்றதாக ஓ.பி.எஸ் மீது எடப்பாடி குற்றம்சாட்டுகிறார். அலுவலகத்தில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டால் தற்கொலை செய்துகொள்ளத் தயார்.

அதிமுக கட்சியையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்கு ஓ.பி.எஸ் புலியாக மாறுவார். 2023-ல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒற்றைத் தலைமையில் ஓபிஎஸ் கட்சியை வழிநடத்தி, வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்” எனத் தெரிவித்தார்.