மெட்ராஸ் டே: 350 ஆண்டுக்கால வரலாற்றை சுமக்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் சுவாரஸ்யங்கள்!

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை. இந்த கோட்டையின் முதன்மைப் பகுதி கி.பி. 1640, ஏப்ரல் 23-ம் தேதி புனித ஜார்ஜ் நாளன்று கட்டி முடிக்கப்பட்டதால், இந்தக் கோட்டைக்கு `புனித ஜார்ஜ் கோட்டை’ என்ற புகழ் பெயர் வாய்க்கப்பெற்றது. தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வரும் இந்தக் கோட்டை, 350 ஆண்டுக்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய அடையாளமாக, தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத ஓர் இடமாக விளங்கும் புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

புனித ஜார்ஜ் கோட்டை

கி.பி. 1600-ம் ஆண்டுவாக்கில் வணிகம் செய்வதற்காக இந்தியாக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தங்களின் வணிக மையங்களை நிறுவினர். குறிப்பாக, வணிகம் செய்வதற்கு ஏதுவாக கடற்கரை நகரங்களில் தங்கி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர். அந்த வகையில், இந்தியாவின் கிழக்குப் பகுதியான வங்கக்கடலில் தங்களின் வணிக செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு ஒரு தகுதிவாய்ந்த துறைமுகப் பட்டினத்தை எதிர்நோக்கினர். தொடக்கத்தில், ஆந்திராவிலுள்ள மசூலிப்படினத்தைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள், அங்கு தங்களின் வாணிப, வணிக செழுமைக்கு எதிர்பார்த்த வழி எட்டப்படாததால், தென்பகுதியான மதராசப்பட்டினத்தை நோக்கி நகர்ந்தனர். மலாக்கா நீரிணையைக் கடந்து தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கிடையே கடல்வழி வணிகம் மேற்கொள்ள சிறந்த தளமாக மதராசப்பட்டினத்தைக் கருதினர்.

அதைத் தொடர்ந்து, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் பிரான்ஸிஸ் டே என்பவர், விஜயநகர மன்னர் வேங்கடப்பர் அவர் சகோதரர்களின் நிர்வாகத்தின்கீழ் இருந்த புலிகாட் முதல் சாந்தோம் வரையிலான இடங்களை ஆய்வுசெய்தார். அதன்பின்னர், வேங்கடப்பரிடம் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்திய பிரான்ஸிஸ் டே, சாந்தோமுக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் இருக்கும் மதராசப்பட்டினத்துக்கு அருகிலிருக்கும் ஓர் மீனவர் கிராமத்தில் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆண்டுக்கு 600 பவுண்ட் வாடகை என்ற அடிப்படையில் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அதன்பிறகு, கி.பி. 1640-ல் அந்த கடலோர கிராமத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் இந்திய மதிப்பில் சுமார் 2.5 லட்சம் ரூபாய்க்கு ஒரு மிகப்பெரிய கோட்டையையும், துறைமுகத்தையும் கட்டியெழுப்பினர். புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23-ல் கோட்டை கட்டப்பட்டதால் புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயரைச் சூட்டினர்.

மதராசப்பட்டினம்

ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி நகரம் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. ஜார்ஜ் டவுன் என்ற புதிய குடியேற்றப்பகுதி முளைத்தது. கோட்டை வணிக நடவடிக்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக மாறியதையடுத்து, கி.பி. 1641-ம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக புனித ஜார்ஜ் கோட்டை உருமாற்றம் பெற்றது. தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தை கோகனும், பிரான்சிஸ்டேவும் அடுத்தடுத்து கவனித்து வந்தனர். அதன்பிறகு பல்வேறு ஆங்கிலேய அதிகாரிகளும், ஆளுநர்களும் பொறுப்பேற்றபடி இருந்தனர்.

மெட்ராஸ்

நாளடைவில் ஜார்ஜ் கோட்டை விரிவாக்கம் பெற்றது. கோட்டையின் பாதுகாப்புக்காக 6 மீட்டர் உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. கோட்டை வளாகத்தினுள், 1678-ல் புனித மேரி ஆலயம் கட்டப்பட்டது (இந்த சர்ச்சில்தான் 1753-ல் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட ராபர்ட் கிளைவுக்கு திருமணம் நடைபெற்றது). 1695-ல் பிரான்சிஸ் டே கட்டிய `போர்ட் ஹவுஸ்’ கட்டடம் இடிக்கப்பட்டு, ஆங்கிலேய அதிகாரிகள் தங்கும் வகையில் வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஆளுநர் இல்லம், அலுவலகங்கள் கட்டமைக்கப்பட்டன.

1746-ல் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்ற பிரெஞ்சுக்காரர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றினர். ஆனால், அடுத்த மூன்றாண்டுகளிலேயே 1749-ல் பிரெஞ்சுகாரர்களிடமிருந்து புனித ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் போரிட்டு மீட்டனர். அதைத் தொடர்ந்து கோட்டையின் பாதுகாப்பை பலப்படுத்தும்விதமாக, கோட்டையைச் சுற்றி அகழி வெட்டப்பட்டது. சுமார் 20 அடி உயரத்தில் கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டன. இருப்பினும், 1758-59 காலகட்டத்தில் மீண்டும் பிரெஞ்சுகாரர்களால் புனித ஜார்ஜ் கோட்டை தாக்குலுக்குள்ளானது. இதையடுத்து, 1783-ல் கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. கோட்டையைச் சுற்றி ஆங்கிலேய படைவீரர்கள், பீரங்கிப் படைகள் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

ராபர்ட் கிளைவ்

1932-ம் ஆண்டு ஜனவரி 26-ம் சுதந்திரப் போராட்ட வீரரான பாஷ்யம் ஆர்யா என்பவர், ஆங்கிலேயப் படையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள 140 அடி கொடிக்கம்பத்தில் ஏறி, ஆங்கிலேயக் கொடியான யூனியன் ஜாக்கை கீழே இறக்கி, இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்ட வீரதீர செயலும் புனித ஜார்ஜ் கோட்டையில் நிகழ்ந்தது. அதன்பிறகு இந்தியா சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் மூவர்ணக்கொடியே புனித ஜார்ஜ் கோட்டையில் பட்டொளிவீசி பறக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் 1947-ம் ஆண்டு முதன்முதலாக ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை பீரங்கி

சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கோட்டையின் வளாகத்தில் தற்போதும், வெல்லஸ்லி இல்லம், கிளைவ் மாளிகை, புனித மேரி ஆலயம், டவுன் ஹால், பாரக்ஸ் கட்டடம், கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட முக்கியமான கட்டடங்கள் சிதிலமடையாமல் உறுதியாக நிற்கின்றன. இத்தகையப் பழம்பெருமை வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், அமைச்சர் அலுவலகங்கள் மற்றும் சட்டமன்றமும் இயங்கிவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.