சிகிச்சையில் இருந்த நோயாளியை நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய புகாருக்கு உள்ளான மருத்துவரின் பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 2015ம் ஆண்டு செப்டம்பர் 27இல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர், தீவிர சிகிச்சை பலனளிக்காததால், அக்டோபர் 11இல் இறந்துள்ளார்.
இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி தனது சகோதரரின் மாமனாரான கோவையை சேர்ந்த மருத்துவர் எஸ்.ராதாகிருஷ்ணன் போலியாக மருத்துவ தகுதி சான்று கொடுத்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான 19 சொத்துக்களை, தனது சகோதரர் பெயருக்கு பதிவு செய்ததாக பிச்சுமணியின் மகள் ஸ்ரீசுபிதா, இந்திய மருத்துவ ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டு, விசாரிக்கப்பட்ட நிலையில், ராதாகிருஷ்ணனின் மருத்துவர் என்ற பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கம் செய்வதாக 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மருத்துவர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, தனது மருமகன் பெயரில் சொத்துகளை பதிவு செய்யும் உள்நோக்கத்துடன், நோயாளி நலமுடன் இருக்கிறார் என போலியாக சான்றிதழ் வழங்கியதை தீவிரமானதாகத்தான் கருத வேண்டும் என தெரிவித்து, அதற்காக விதிக்கப்பட்ட தண்டனையை அதிகமாக கருதவில்லை என கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து, அமெரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்ததன் மூலம் மருத்துவர் ராதாகிருஷ்ணன் பெற்ற நன்மதிப்பை, ரியல் எஸ்டேட்ட் துறையில் பெருகிவரும் நிலத்தின் மதிப்பு கெடுத்துவிட்டதாகவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.