புதுடெல்லி: ‘பொதுத்துறை வங்கிகளை அவசர கதியில் தனியார்மயமாக்குவது ஆபத்துக்கு வழிவகுக்கும்’ என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், ‘பெருமளவு வங்கிகளை அவசர கதியில் தனியார் மயமாக்குவது நல்லதற்கு பதிலாக தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயம், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள படிப்படியான தனியார் மயம் சிறந்த விளைவுகளையே ஏற்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘ரிசர்வ் வங்கி எச்சரிக்கை! ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டு விட்டது.
கிட்டத்தட்ட, ஒரே நாடு, ஒரே வங்கி என்ற கொள்கையை நோக்கி, ஒரு பொதுத்துறை வங்கியாக குறைப்பதுதான் ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்குமோ? இவ்வாறு அதிகப்படியான வங்கிகள் தனியார் மயம் பேரிழவை தரும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ஆனால், பாஜ அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. இதே போலத்தான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலும் ரிசர்வ் வங்கி பேச்சை ஒன்றிய அரசு கேட்கவில்லை,’ என கூறி உள்ளார்.