ஐதராபாத்: ஹனு ராகவபுடி இயக்கிய ‘சீதா ராமம்’ திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீதா ராமம், வசூலிலும் அசத்தி வருகிறது.
காதலில் திளைத்த சீதா ராமம்
சீதா ராமம் படம் தொடங்கப்பட்ட போது, ரசிகர்களிடம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. ஆனால், அடுத்தடுத்து வெளியான சில போஸ்டர்களும், ராஷ்மிகா மந்தனாவின் டீசரும், ‘சீதா ராமம்’ படம் பற்றிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அதுவும் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிப்பதால்; ஆக்சன் படமாக இருக்குமே என யோசிக்க வைத்தது. ஆனால், அதெல்லாவற்றுக்கும் மாற்றாக, துல்கர் சல்மான், மிருணாள் தாகூரின் காதல் காவியமாக சீதா ராமம் உருவாகியுள்ளது.
சர்ச்சைகளை கடந்த வெற்றி
‘சீதா ராமம்’ காதல் பின்னணியில் உருவாகி இருந்தாலும், காஷ்மீர் கதைக்களத்தில் படமாக்கப்பட்டதால், இந்தியா – பாகிஸ்தான் என அரசியல் ரீதியான சர்ச்சைகள் எழுந்தன. இதனால், சீதா ராமம் படத்தை வெளியிட அரபு நாடுகள் தடை விதித்தன. அதேபோல், சினிமா விமர்சகர்களும் சீதா ராமம் படத்தில் சில அரசியல் பிழைகள் இருப்பதாக சுட்டிக் காட்டியிருந்தனர். இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான தரமான காதல் காவியம் என ரசிகர்கள் கொண்டாடினர்.
வசூலில் பாஸ் ஆன சீதா ராமம்
சீதா ராமம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், முதல் வாரமே வசூலில் சக்கை போடு போட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் எதிர்பார்த்ததை விட வசூல் மழையில் நனைந்தது சீதா ராமம் படக்குழு. இதனால், துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், இயக்குநர் ஹனு ராகவபுடி உள்ளிட்ட மொத்த டீமும் மகிழ்ச்சியில் திளைத்தனர். முக்கியமாக முதல் இரண்டு வாரங்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
மூன்றாவது வாரத்திலும் வசூல் மழை
முதல் 2 வாரங்களைப் போலவே மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக வசூலில் சாதனைப் படைத்து வருகிறது சீதா ராமம். இரண்டு வாராங்களில் 50 கோடிகளை கடந்த நிலையில், தற்போது 65 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது. இதனை சீதா ராமம் பாடக்குழுவினர், செம்மையாக செலிப்ரேட் செய்து வருகின்றனர்.