தைவான்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இந்தப் பயிற்சி 15 நாட்கள் வரை நடைபெற்றன.
இந்த நிலையில், “ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்று கூறி சீனா ஒத்திகையை முடித்தது. இத்துடன் போர் பதற்றம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் போர் தளவாடங்களை சீனா குவித்து வருவதாக தைவான் குற்றஞ்சாட்டியுள்ளது.
21 போர் விமானங்கள், 5 போர்க் கப்பல்கள்: இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இதுவரை நாங்கள் 17 சீன போர் விமானங்கள், 5 போர்க் கப்பல்கள் ஆகியனவற்றை எல்லையில் கண்டுள்ளோம். இவை தைவன் ஜலசந்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 4 Xi’an JH-7 ஃபைட்டர் பாம்பர், இரண்டு சுகோய் Su-30 ஃபைட்டர், இரண்டு ஷென்யாங் J-11 ஜெட் ஆகியனவும் அடங்கும். JH-7, J-11 விமானங்கள் தைவன் ஜலசந்தியின் மத்திய கோடை தாண்டி பறந்தது.
இந்நிலையில் தைவான் கடல்பரப்பில் வான்வழி கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். தாக்குதல்களை எதிர்கொள்ளவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்க எம்.பி. நான்சி பெலோசி வருகைக்குப் பின்னர் சீன தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.
போர் ஒத்திகை முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்தாலும் சீனா தற்போது மீண்டும் போர்க் கப்பல்கள், போர் விமானங்களைக் குவிப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.