அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்காக `ஆர்ட்டெமிஸ் 1 (Artemis 1) என்ற மிஷனில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.
இதற்காகத் தயார் செய்யப்பட்ட ‘ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்)’ என அழைக்கப்படும் ராட்சத நிலவு ராக்கெட் ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. சோதனைப் பயணமான இந்த விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக ஹெல்கா, ஜோஹர் என்ற இரண்டு சென்சார்கள் நிறைந்த, மனித உருவ பொம்மைகள் (Mannequins) பயன்படுத்தப்படவுள்ளன. இந்த பொம்மைகள் மனிதர்களைப்போலவே திசுக்களையும், உறுப்புகளையும், பெண்ணின் எலும்புகளையும் கொண்டவை. எதிர்காலத்தில் நிலவுக்குப் பெண்ணை அனுப்பும் திட்டம் இருப்பதால் இப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பொம்மையில் 5,600 சென்சார்கள் மற்றும் 34 ரேடியேஷன் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணத்தின் போது நடக்கும் நிகழ்வுகளையும் நிலைமைகளையும் பதிவு செய்யும்.
நிலவில் மனிதன் காலடி பதித்து சுமார் அரை நூற்றாண்டு நிறைவுபெறுகிறது. இதை நாசா, வரும் டிசம்பர் மாதம் கொண்டாடவுள்ளது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின் அனுப்பப்படும் இந்த ராக்கெட்டில் ஏராளமான நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக அமேசானின் அலெக்சா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது விண்வெளி வீரர்களின் வேலையை எளிதாக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதற்காகப் பிரத்யேகமாக அலெக்சாவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு ‘காலிஸ்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் எம். ஷூல்ஸ் என்பவர் உருவாக்கிய பொம்மைகள், கார்ட்டூன் படங்களில்கூட விண்வெளி வீரரின் கூடவே கற்பனைக் கதாபாத்திரமாக வருமே ‘ஸ்னூப்பி’ என்ற பொம்மை. அது போன்ற ஒரு பொம்மை ரோபோ இந்த விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது விண்கலத்தின் உள்ளே பூஜ்ய புவி ஈர்ப்பைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனைப் பயணத்தை அடுத்து 2024-ல் விண்வெளி வீரர்களுடன் ‘ஆர்ட்டெமிஸ் 2’ லன்ச் செய்யப்படும் என்றும் அதைத் தொடர்ந்து 2025-ல் ஆர்ட்டெமிஸ் 3-ன் விண்வெளிப் பயணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆர்ட்டெமிஸ்ஸின் மூன்றாவது பயணத்தில் முதல்முறையாக ஒரு பெண் விண்வெளிவீரர் நிலவில் கால்பதிப்பார் என்று நாசா உறுதியளித்துள்ளது.