அவர்களின் galin`காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்… இனி தேசிய அரசியலில் பா.ஜ.க-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே’ என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. பிரதமர் மோடி, `இலவசங்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது’ என்று ஒருபுறம் குரல் கொடுக்க, மறுபுறம், `மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை இலவசமாகக் கொடுப்பது குற்றமா?’ என்று கேள்வியெழுப்பிவருகிறார் கெஜ்ரிவால். இப்படியாக இரண்டு கட்சிகளும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட சி.பி.ஐ சோதனை தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
ரெய்டு பின்னணி என்ன?
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட அவருக்குத் தொடர்புடைய 21 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 19) சோதனை நடத்தியது சி.பி.ஐ. கடந்த ஜூலை மாதம், டெல்லி அரசு வரிக் கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பாகப் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் உற்பத்தி வரித் துறைக்கான பொறுப்புகளை வகிக்கிறார். இந்தப் புகாரை விசாரித்த சி.பி.ஐ., சிசோடியா விதிகளை மீறி மதுபான லைசென்ஸ்களை வழங்கியிருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியது. அதையொட்டிதான் நேற்று அதிரடியாக 21 இடங்களில் சோதனை நடத்தியது சி.பி.ஐ.
ஆம் ஆத்மி Vs பா.ஜ.க!
இது குறித்து மணீஷ் சிசோடியா, “சி.பி.ஐ என் வீட்டில் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ஆனால், அவர்களால் எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாது. கல்வி, சுகாதாரத்தில் டெல்லி அரசு சிறந்து விளங்குவதால், எங்களுக்குச் சங்கடங்களை ஏற்படுத்தப் பார்க்கிறது மத்திய அரசு” என்று கூறியிருக்கிறார்.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “அமெரிக்காவின் மிகப்பெரிய நாளிதழான நியூயார்க் டைம்ஸ், `டெல்லி மாடல்’ கல்வியைப் பாராட்டியிருக்கிறது. இதன் மூலம் உலகின் சிறந்த கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா என்பது நிரூபணமாகியிருக்கிறது. சிசோடியா புகைப்படம் நியூயார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் வந்திருக்கும் இந்தச் சமயத்தில், அவரது வீட்டில் சோதனையிட வந்திருக்கும் சி.பி.ஐ-யை நாங்கள் வரவேற்கிறோம். இந்தச் சோதனைக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உண்டு. இருந்தும், கடந்த காலங்களைப் போலவே, இந்த முறையும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. டெல்லியின் கல்வி மாடல் உலக அளவில் பேசப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்தத்தான் இந்த ரெய்டு” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “சி.பி.ஐ விசாரணையில் உண்மைகள் வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில், கல்வித் துறையில் தாங்கள் செய்ததை இந்த சோதனையுடன் தொடர்புபடுத்தப் பார்க்கிறார்கள். இது கல்வியைப் பற்றியது அல்ல; வரிக் கொள்கைகள் பற்றியது. கெஜ்ரிவாலும், சிசோடியாவும் வரிக் கொள்கைகளில் செய்திருக்கும் ஊழல்கள் அவர்களின் உண்மை முகங்களை வெளியில் கொண்டுவரும்” என்று கூறியிருக்கிறார்.
நியூயார்க் டைம்ஸ் Vs கலிஜ் டைம்ஸ்
இதற்கிடையில், `நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்திகளை வரி மாறாமல் துபாயிலிருந்து வெளியாகும் `கலிஜ் டைம்ஸ்’ நாளிதழும் வெளியிட்டிருந்தது. அந்த இரண்டு செய்திகளை ட்விட்டரில் பதிவிட்ட பா.ஜ.க-வினர், `நியூயார்க் டைம்ஸில் வந்த கட்டுரையை அப்படியே வரி மாறாமல் வெளியிட்டிருக்கிறது கலிஜ் டைம்ஸ். புகைப்படங்களும் மாறவில்லை. இதன்மூலம், இது பணம் கொடுத்து போடப்பட்ட கட்டுரை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துவருகின்றனர்.
இதையடுத்து ஆம் ஆத்மியினர், `கலிஜ் டைம்ஸ் கட்டுரையின் கடைசி வரியை உற்றுப் பாருங்கள். அதில், `இது நியூயார்க் டைம்ஸில் வெளியான கட்டுரை’ என்று குறிப்பிட்டுத்தான் வெளியிட்டிருக்கிறார்கள். இதுபோன்று நியூயார்க் டைம்ஸின் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கின்றனர். அதோடு, #ModiFearsKejriwal (கெஜ்ரிவாலைக் கண்டு மோடி பயப்படுகிறார்) என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர் ஆம் ஆத்மி கட்சியினர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், `இது பணம் கொடுத்துப் போடப்பட்ட கட்டுரை அல்ல; நாங்கள் களத்தில் இறங்கி செய்த ஆய்வின் மூலம் பதிவு செய்யப்பட்ட கட்டுரை’ என்று தெரிவித்திருக்கிறது.
அரசியல் உள்நோக்கமா?
அரசியல் உள்நோக்கத்துடன் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், “குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் பா.ஜ.க-வுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது ஆம் ஆத்மி. நாடு முழுவதும் `குஜராத் மாடலை’ முன்வைத்துப் பிரசாரம் செய்யும் பா.ஜ.க-வுக்கு, குஜராத்திலேயே `டெல்லி மாடலை’ முன்வைத்து பிரசாரம் செய்து தலைவலியை உண்டாக்கியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தொடர்ச்சியாக இலவசங்கள் பற்றிய விவகாரத்திலும் இவ்விரண்டு கட்சிகளும் மோதிக் கொண்டிருக்கின்றன.
ஆம் ஆத்மி அறிவித்த அதிரடி வாக்குறுதிகளால், பஞ்சாப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது அந்தக் கட்சி. அதேபோல, தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் குஜராத்திலும் வலிமை அடைந்துவருகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கும் இமாச்சலப் பிரதேசத்திலும் ஆம் ஆத்மி வலுப்பெற்று வருகிறது. இந்தச் சமயத்தில், டெல்லியின் துணை முதல்வர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருப்பதால், இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது” என்கின்றனர்.
மேலும், “ஆம் ஆத்மியும் இந்தச் சோதனைகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள நினைக்கிறது. `பா.ஜ.க, ஆம் ஆத்மியைக் கண்டு பயப்படுவதால்தான், இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுகின்றன’ என்பதை கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் ஒரு பிரசாரமாகவே செய்கின்றனர். இதன்மூலம், தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு தாங்கள்தான் எதிரி என்ற பிம்பத்தை ஆம் ஆத்மி கட்டமைக்கப் பார்க்கிறது” என்கின்றனர் தேசிய அரசியலை உற்று நோக்கும் ஆர்வலர்கள்.