தமிழகம் முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இன்றுவரை ஆளுநர் வசம் இருந்து வருகிறது. அதேபோல், மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும்போது, அம்மாநில அரசிடம் கலந்தாலோசிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என் ரவி தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் தற்போது வரை 3 துணைவேந்தர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசப்பட்ட நிலையில், மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் பணியை அரசே மேற்கொள்ளும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்து வருவதை மேற்கோள்காட்டி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநில அரசை நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார், துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்வது அரசியலுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மாநில அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா என்பது, மாநில அரசின் உரிமை தொடர்பானது எனவும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர் தனக்கு மட்டுமே உருமை உள்ளது போல் செயல்பட்டு வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், உயர் கல்வி அளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என குறிப்பிட்டிருந்த மு.க ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு ஆளுநரிடம் தலைதூக்கி உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில்தான் தற்போது ஆளுநர் அந்த அம்மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ