திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் நடந்த அரசுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதற்காக 4 மணி நேரம் இணைய சேவையை துண்டித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு வேலை என்பது பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகவே உள்ளது. இதற்காக கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு பல ஆண்டுகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள்.
அரசு வேலையை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்ற கனவுடன் இளைஞர்கள் படித்து வருகின்றனர். வேலைவாய்ப்பும் குறைந்துள்ளதால் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அரசு பணிகளுக்கு போட்டி
ஒன்றிரண்டு பணியிடங்களுக்கு கூட ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பதையெல்லாம் சமீப காலமாக அடிக்கடி நாம் செய்திகளில் பார்க்கும் ஒன்றாகவே உள்ளது. தேர்வு ஆணையங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போட்டி தற்போது உள்ளது. இதனால், தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதும் தேர்வாணையங்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது.
27 ஆயிரம் பணியிடங்கள்
அந்த வகையில், அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அரசுத் தேர்வுக்கான போட்டித்தேர்வில் முறைகேட்டை தடுக்க அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-3, குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சுமார் 14 லட்சம் இளைஞர்கள் திரண்டனர்.
144 தடை உத்தரவு
காலையில் இருந்தே தேர்வு மையங்களை நோக்கி திருவிழா போல தேர்வர்கள் படையெடுத்தனர். தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக அசாம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தேர்வு மையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலைமுதல் தேர்வு முடியும் வரையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. அதேபோல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காணொலி வாயிலாக ஆலோசனை
தேர்வர்கள் மட்டும் இன்றி தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எலக்ட்ரானிக் உபகரணங்கள் எதையும் எடுத்துச்செல்லக்கூடாது என்ற விதியோடு, தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வர்கள் தேர்வுக்கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக நேற்று அசாம் முதல்வர் அனைத்து மாவட்ட கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது, முறைகேடுகள் நடைபெறாமல் தேர்வுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டு இருந்தார்.