தென்காசி: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது, தேவைப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வது ஆகியவை குறித்து 2 சட்ட மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 4 மாதங்கள் அதனை கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆளுநர் அந்த மசோதா மீது கேள்வி எழுப்புகிறார். நாட்டில் வேறு பல மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் உள்ளது. அரசு நியமித்தால் தவறு நடக்கும்.
ஆளுநர் நியமித்தால் தவறு நடக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே ஆளுநர் நியமித்த சில அதிகாரிகள், பல குற்றச்சாட்டுகளில் சிக்கிபதவி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்தப்பட்ட அரசுக்கு எதிராகவும், போட்டியாகவும் செயல்படுவது ஜனநாயக விரோதமான செயல். இதனை கண்டிக்கிறோம். ஆளுநர் இந்த மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். பாஜ தலைவர் அண்ணாமலை யாரோ எழுதிக் கொடுப்பதை வாசித்து வருகிறார். 10 ஆண்டுகளாக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தனர். இப்பொழுதும் கூட்டணியில் உள்ளனர்.
அப்போது நடைபெற்ற எந்த ஒரு தவறையாவது சுட்டிக்காட்டினார்களா? ஊழல்வாதிகள் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு தற்போதைய அரசை குறை சொல்வதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. நாட்டை குட்டிச் சுவராக்கிய ஒன்றிய பாஜ ஆட்சியின் அடாவடி அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகத்தில் அது பாஜவிற்கு பலன் தராது. மின் கட்டண பாக்கிக்காக மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்க முடியாது என்று கூறுவது தவறு. திருமங்கலம் – கொல்லம் 4 வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் தலைமை பொதுமேலாளரை சந்தித்து முறையிடுவோம். கேட்கவில்லை எனில் மக்களை திரட்டி போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.