தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 11 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோரை ஆளுநர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த பயணத்தின்போது, டெல்லியில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று திரும்பினார். செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, புதிதாக பதவியேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கூட அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி செல்லாத போது, ஏன் ஸ்டாலின் மட்டும் அவசர அவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
டெல்லி பயணத்தின் போது ஸ்டாலினுக்கு 10 நிமிடங்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும், அப்போது, அவர்கள் இருவரை தவிர வேறு யாருமே உடன் இல்லை என்ற தகவலும் வெளியாகி கூடுதல் பரபரப்பை கிளப்பியது. முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த உற்சாகமாக காணப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
இந்த பின்னணியில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, தனது டெல்லி பயணத்தின்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட நிலுவையில் உள்ள சில மசோதாக்கள் பற்றி ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார். அப்போது, துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் டெல்லி சென்று திரும்பியதும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், விளக்கம் கேட்டு தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். பாஜகவுடன் சற்று இணக்கமான போக்குடன் ஸ்டாலின் செல்வதாலும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது பாஜகவுக்கு தேர்தல் நேரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சொல்லி டெல்லி நோட் வைத்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தி கடந்த முறை ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. ஆனால், இந்த முறை முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இருப்பினும், துணை வேந்தர் நியமன மசோதா அவர் திரும்ப அணுப்பியுள்ளார்.” என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “குஜராத், கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசு அதிகாரம் பெற்றுள்ளது. அதனடிப்படையிலேயே தமிழகத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதனை வைத்து திமுக கூட்டணி கட்சிகள் அரசியல் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு விருப்பமில்லை. உயர்கல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக்கும் முயற்சிகளிலும், சனாதானத்தை புகுத்தும் முயற்சிகளிலும் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கல்வி நிறுவனங்களில் ஆளுநரின் சமீபத்திய பேச்சுகளும் இதனை எதிரொலிக்கும் விதமாக உள்ளன. எனவே, அந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உயர்கல்வித்துறை தனது கையை விட்டு செல்ல ஆளுநர் விரும்ப மாட்டார். ஏற்கனவே, நீட் விலக்கு மசோதாவில் தவறான சட்டப்பிரிவை பயன்படுத்தியால், ஆளுநர் சிக்கலுக்கு ஆளானார். எனவே, இதுபோன்று எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை பயணமாக டெல்லி சென்று அங்கு இதுபற்றியெல்லாம் அவர் விவாதிக்க வாய்ப்புள்ளது.” என்கின்றனர்.