திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் 1,128 சொத்துகள், 10 டன் தங்கம், ரூ.8,500 கோடிக்கு தங்க கட்டிகள் உள்ளன. உலகின் பெரிய பணக்கார கடவுள் யார் என்றால் அது திருப்பதி ஏழுமலையான்தான். இவரை தரிசிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகின்றனர். அவர்கள் பணம், தங்கம், சொத்துகளாக காணிக்கை செலுத்துகின்றனர். தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.300 கோடி நன்கொடையும் கிடைக்கிறது. பக்தர்கள் வழங்கிய 10 டன் தங்கம் தேவஸ்தான வங்கியிலும், பல்வேறு வங்கிகளில் ரூ.8,500 கோடி தங்க கட்டிகள், கோடிக்கணக்கான பணமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு தனியாக வட்டி கிடைக்கிறது.
மேலும், நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் பக்தர்கள் ஏராளமான நிலங்களை ஏழுமலையானுக்கு காணிக்கை தந்துள்ளனர். இதில், 7,636 ஏக்கரை விற்றது கடந்தாண்டு சர்ச்சையை ஏற்படுத்தியதால், இனிமேல் சொத்துகளை விற்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த சொத்துகளை அடையாளம் காணவும், பாதுகாக்கவும், மீட்கவும், வருமானம் ஈட்டவும் 4 நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், நாடு முழுவதும் தேவஸ்தானத்துக்கு 1,128 சொத்துகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. இதில் 173 சொத்துக்கள், 2014 ஆண்டுக்கு முன் ரூ.114 கோடிக்கு அறங்காவலர் குழு அனுமதியுடன் விற்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 75 பகுதிகளில் 7,636 ஏக்கரில் சொத்துகள் உள்ளன. இதில் விவசாய நிலங்கள் 1,226 ஏக்கர், விவசாயம் அல்லாத நிலங்கள் 6,410 ஏக்கர். மேலும், 535 சொத்துகள் தேவஸ்தானம் பயன்பாட்டில் உள்ளன. 159 சொத்துகளை குத்தகைக்கு விடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.4.15 கோடி வருமானம் கிடைக்கிறது.
மேலும், பயன்பாட்டில் இல்லாத 169 சொத்துகளை மற்றவர்களுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 ஏக்கர் நிலம் 29 இடங்களில் கேட்பாரின்றி கிடந்தது. ரூ.23 கோடி மதிப்புள்ள அவற்றை மீட்டுள்ளனர். பல சொத்துகள் தொடர்பாக வழக்குகள் நடக்கின்றன. தேவஸ்தானத்துக்கு நாடு முழுவதும் 307 இடங்களில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில், 166 மற்றவர்களுக்கும், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு 29ம் குத்தகைக்கு விடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.4.28 கோடி கிடைக்கிறது. இந்த சொத்துகளை எல்லாம் பாதுகாக்கவும், எளிதாக அடையாளம் காணவும் புவி-குறியீடல், புவி-வேலி (ஜியோ டேக்கிங் ) செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.