பாட்னா: பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லால்மோகன் பஸ்வான். தையல்காரரான இவர் காந்தியவாதி. 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவரிடம் ஒரு வார காலத்துக்குள் 450 தேசியக் கொடிகள் தைத்து கொடுக்க முடியுமா என, ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் கேட்டது. தனது 91 வயதில், இது கஷ்டமான பணிதான் என தெரிந்தும், இந்த ஆர்டரை ஏற்றார் லால்மோகன் பஸ்வான். வாக்குறுதி அளித்தபடி, சுதந்திர தினத்துக்கு முன்பாக 450 தேசியக் கொடிகளையும் தைத்து கொடுத்தார் பஸ்வான்.
இதுகுறித்து லால் மோகன் கூறியதாவது: தேசியக் கொடி தைப்பதை புனித கடமையாக கருதி, நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் தைத்து, 450 தேசியக் கொடிகளை குறித்த நேரத்தில் வழங்கினேன். நேரு, ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள்தான் எனக்கு முன் மாதிரிகள். காந்தியின் அகிம்சைதான் அமைதியான உலகுக்கு ஒரே வழி.
கடந்த 2008-ம் ஆண்டில் கோசி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, எனது வீடு, கால்நடைகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விளைநிலங்களும் விவசாயத்துக்கு பயனற்றதாகிவிட்டன. அதனால் விவசாய தொழிலாளராக இருந்த நான் வாழ்வாதாரத்தை இழந்தேன். ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம், முதியோருக்குான சுய உதவிக் குழுவில் இணைந்து, ரூ.7,500 கடன் பெற்றேன். அதில் தையல் இயந்திரம் வாங்கி துணிகள் தைத்து கொடுத்தேன். அதன் மூலம் மாதத்துக்கு ரூ.1,500 சம்பாதித்தேன். இவ்வாறு லால்மோகன் கூறினார்.
ஹெல்ப் ஏஜ் இந்தியா சுபால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘‘லால் மோகன் குறித்த நேரத்தில் 450 தேசியக் கொடிகளை தைத்து கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன், அவரிடம் தேசியக் கொடி தைத்து கொடுக்கும் ஆர்டரை வழங்கினோம். அவருடைய மனஉறுதி, எங்கள் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கிறது ” என்றார்.