சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் 22 பேர் உயிரிழந்த நிலையில் ஒடிசா மற்றும் உத்தகாண்ட் மாநிலத்திலும் மழை தொடர்ந்து வருகிறது.
Recommended Video
இந்நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இந்த மூன்று மாநிலங்களில் சுமார் 50 உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மழை காரணமாக பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக மழை பெய்து வருவதால், ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்ததால், பல்வேறு ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு பெற்றதால் குறிப்பிட்ட இடங்களில் மலைச்சரிவும் ஏற்பட்டது. இதில் மாநிலத்தின் காங்க்ரா, மாண்டி, ஹமீர்பூர் மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
தாழ்வான இடங்கள் பெரும்பாலும் வெள்ளத்தில் மூழ்கி அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தன. கனமழையானது இமாச்சலப் பிரதேசம் மட்டுமல்லாது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தையும் வெளுத்து வாங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 36 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல உத்தரகாண்டிலும் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காணாமல் போயுள்ளனர். ஒடிசாவில் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர், மழையால் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில், சனிக்கிழமையன்று நல்காரி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராம்கர் மாவட்ட அதிகாரி மத்வி மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.