கர்நாடக மாநில முதலமைச்சராக, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு ஆதரவு அளிப்பேன் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போதே தொடங்கி விட்டது எனக் கூறலாம்.
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும் பாஜக தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலேயே இந்த தேர்தலை சந்திக்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், படு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார் அரும்பாடு பட்டு வருகிறார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலும் இவரே முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், காங்கிரஸ் – பாஜகவுக்கு இடையேயான போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றி பெறும் பட்சத்தில், அவருக்கு ஆதரவு அளிப்பேன் என, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்து உள்ளார்.
சித்ரதுர்காவில், வொக்கலிகா சமூக நிகழ்ச்சியில் பேசிய குமாரசாமி, “சட்டப்பேரவைத் தேர்தலில் என்னால் முடிந்தவரை போராடுவேன். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் அவரது உழைப்பை கொடுக்கட்டும். கர்நாடக மாநில முதலமைச்சராக, டி.கே.சிவகுமார் வர வேண்டும் என கடவுள் விரும்பினால் அவர் வரட்டும். அதற்கு என் முழு ஆதரவு கொடுப்பேன்” என தெரிவித்தார். இதன் மூலம், எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற, குமாரசாமி மூவ் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.