வேலூர்: காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் 952 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. சத்துவாச்சாரியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது. முதல் தவணை தடுப்பூசி, 2ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என போடப்படுகிறது.
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் 3.50 கோடியாக உள்ளனர். இவர்களை இலக்காக வைக்கப்பட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 27 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் கையிருப்பு உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்தும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கவும், கூடுதல் தடுப்பூசி கேட்டும் அடுத்த வாரம் ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். மருத்துவமனையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்படும்.
அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு முடிந்தபிறகு பணிகள் தொடங்கப்படும். குரங்கம்மை குறித்து தொடர் கண்காணிப்பு செய்து வருகிறோம். இதுவரை தமிழகத்தில் பாதிப்பு இல்லை. கேரளாவை ஒட்டிய 13 இடங்களில் தொடர் கண்காணிப்பில் உள்ளோம். ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பண்ணாட்டு மருத்துவ நிகழ்வில் ஒன்றிய அமைச்சரோடு நானும் கலந்து கொள்கிறேன். அப்போது, முன்னோடி திட்டமான இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து அங்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. சோதனைகள் நடத்தி தவறு செய்யும் மருத்துவர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.