வேலையில்லாமல் நாடு முழுவதும் இளைஞர்கள் திண்டாடி வரும் நிலையில் மத்திய அரசு காலை எழுந்தவுடன் சிபிஐ மற்றும் அமலாக்க துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலைகளை தொடங்குவதாக? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய கலால் வரி கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, கலால் வரித்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மனிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து பேருக்கு நேற்றைய தினம் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 13 பேர் மீதும் லுக் அவுட் நோட்டீஸ் சிபிஐ பிறப்பித்துள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ”பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும் சாமானியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் இந்நேரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க போராட வேண்டும். மாறாக சாமானியர்களும் இளைஞர்களும் நாட்டில் போராட்டம் நடத்தி வருவதாகவும், மத்திய அரசோ காலையில் எழுந்தவுடன் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் மூலம் அவர்களது ஆட்டத்தை தொடங்குவதாகவும் இப்படிப்பட்ட நாடு எப்படி முன்னேறும்?” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ‘டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ் கடும் சீற்றம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM