சென்னை: கும்பகோணம் அருகே 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோழர் காலத்து நடன சம்பந்தர் வெண்கல சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்டு தமிழகம் கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இருந்த சோழர் காலத்தை சேர்ந்த நடன சம்பந்தர், கிருஷ்ண காளிங்க நர்த்தனம், ஐயனார், அகஸ்தியர், பார்வதி தேவி சிலைகளை கடந்த 1971 மே 12-ம் தேதி சில மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். அப்போது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், தண்டந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வாசு என்பவர் 2019-ல் கொடுத்த புகாரின்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா இந்தவழக்கில் புலன் விசாரணை மேற்கொண்டார். சிலைகள் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லாததால், விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், கலாச்சார பொக்கிஷங்களின் களஞ்சியமான புதுச்சேரியில் உள்ள ‘இந்தோ– பிரெஞ்சு’ கல்விநிறுவனத்தில், கொள்ளைபோன சுவாமி சிலைகளின் புகைப்படங்கள் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அவற்றை ஒப்பிட்டு,காணாமல்போன சிலைகள் குறித்து விசாரணைநடத்தியதில், திருடுபோன பார்வதி சிலை, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பழங்கால கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருப்பது சமீபத்தில் தெரியவந்தது.அந்த சிலையை மீட்டு தமிழகம் கொண்டு வரும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், அதே நிறுவனத்தில் நடன சம்பந்தர் சிலை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்தற்போது கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்த அவர்கள், இது தண்டந்தோட்டம் கோயிலில் காணாமல்போன சிலைதான் என்பதை உறுதி செய்துள்ளனர்.
சிலையின் மதிப்பு ரூ.1.92 கோடி
இந்த நடன சம்பந்தர் சிலை 34.3 செ.மீ உயரம் உடையது. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.1.92 கோடி. யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி இந்த சிலையை மீட்டு, தமிழகம் கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே ரூ.1.60 கோடி மதிப்பிலான பார்வதி சிலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதே கோயிலை சேர்ந்த நடன சம்பந்தர் சிலையும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.