வெல்லத்தில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் சத்துமாவு கலவையில் உள்ள வெல்லம் தரமானதுதானா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
6 மாத குழந்தையின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவை அனைத்தும், தாய்ப்பால் மூலமாகக் கிடைப்பதைவிட கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதற்காக தமிழக அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்ககம் சார்பில் 6 மாதம்முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 54,439 அங்கன்வாடிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இணை உணவு, சத்துமாவு கலவையாக வழங்கப்படுகிறது. இந்த சத்துமாவு கலவை, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 26 லட்சத்து 99 ஆயிரத்து 542 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 580 கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், பள்ளி செல்லாத வளரிளம் பெண்கள் 242 பேர் என மொத்தம் 34 லட்சத்து 51 ஆயிரத்து 364 பேருக்கு வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த சத்துமாவு கலவை, தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு பரிந்துரைப்படி தயாரிக்கப்படுகிறது. அதில் 27 சதவீதம் வெல்லம் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ரசாயனம் கலப்பு
தமிழகத்தில் அண்மைக் காலமாக வெல்லத்தில் கலப்படம் செய்வது அதிகரித்துள்ளது. அவற்றில் சர்க்கரை, மைதா போன்றவை சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கும்போது வெல்லப் பாகு இளகி உருண்டை பிடிக்க முடியாது. இதனால், பாகு கெட்டியாவதற்காக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சல்ஃபர் என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெல்லம் கருமை நிறமாக வருவதைத் தவிர்க்க, அவற்றிலிருந்து அழுக்கு நீக்க ‘சோடியம் பை கார்பனேட் ஹைட்ரோஸ்’ போன்ற ரசாயனமும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலம்காலமாக வெல்லம் தயாரிக்கும்போது, சாறு பிழிந்தபின் வெளியேறும் சக்கையை உலர்த்தி, அதை எரிபொருளாக பயன்படுத்துவார்கள். தற்போது துரிதமாக வெல்லம் தயாரிப்பதற்காக டயர்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பயன்படுத்தும்போது வெளியேறும் புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தொழிலாளர்களுக்கும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும், வெளியேறும் கரித் துகள்கள் கொப்பரையில் காய்ச்சும் வெல்லத்திலும், உருண்டை பிடிக்க பாகை ஆற்றும் பலகையிலும் படிந்து, அவை வெல்லத்தில் கலக்கவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சுமார் 27 லட்சம் குழந்தைகள் மற்றும் 7 லட்சத்து 51 ஆயிரம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் சத்துமாவு கலவையில் சேர்க்கப்படும் வெல்லம், ரசாயனங்கள், கரித் துகள்கள் இன்றி தரமாக தயாரிக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத் துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
இதனால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் என பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவில் உள்ள வெல்லத்தின் தரத்தை தாலுகாவாரியாக மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய வேண்டியது உணவு பாதுகாப்புத் துறையின் கடமையாகும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “நாங்கள் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என ஒரே வார்த்தையில் கூறி முடித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் குழந்தைகள் உரிமைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சத்துமாவு கலவையை கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கின்றன. அவர்கள் பயன்படுத்தும் வெல்லம் முறையாக தயாரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறையின் உதவி கோரப்படும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான வெல்லம் கலந்த சத்துமாவு கலவை வழங்குவது உறுதி செய்யப்படும். டயர்கள் கொண்டு எரியூட்டுவதை தடுக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய துறைகள் மூலமாக ஏற்பாடு செய்யப்படும்” என்றனர்.