முதுமலை: கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கிகொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் 4 வயது மகள் சாரிதாவை கடந்த 10-ம் தேதி சிறுத்தை ஒன்று தாக்கி இழுத்துச் சென்றது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்க முதற்கட்டமாக கடந்த 7 நாட்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் தேயிலை தோட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் வனத்துறையினர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் சிறுத்தையை பிடிக்க கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 2 கூண்டுகளை வைத்தனர். அதில் வளர்ப்பு ஆடுகளை கட்டி வைத்தனர். நேற்று காலை வனத்துறையினர் சென்று பார்த்தபோது, சிறுத்தை கூண்டில் சிக்கியது தெரியவந்தது. உதகை வடக்கு வனக் கோட்ட வனச்சரகர் ரமேஷ் தலைமையில் சிறுத்தையை லாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் சிறுத்தையை பாதுகாப்பாக விடுவித்தனர்.