பாட்னா: நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டவரை சட்ட அமைச்சராக நியமித்தது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ், துணை முதல்வர் தேஜஸ்வி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன. பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மெகா கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக தேஜஸ்வி பதவியேற்று உள்ளனர். இவர்களின் தலைமையில் சமீபத்தில் 31 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.
அதில், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த கார்த்திக் குமார் சட்ட அமைச்சராக உள்ளார். இவர் மீது, 2014ல் நடந்த ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாஜ வலியுறுத்தியது. இந்நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரசும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிதிஷ், தேஜஸ்வியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கூறி உள்ளது. இது நிதிஷ், தேஜஸ்விக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.