சென்னை : விஜய் டிவியின் நீயா நானா ஷோவை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருவது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்.
இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல விஷயங்களை விவாதப் பொருளாக கொண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் கோபிநாத்.
இந்த ஷோ இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துள்ளதோடு சில சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.
நீயா நானா ஷோ
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறார் கோபிநாத். இவரது நீயா நானா ஷோ இந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. மேலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
தொகுப்பாளர் கோபிநாத்
குறிப்பாக தற்போது நீயா நானா ஷோ சேனலின் முன்னணி நிகழ்ச்சியாக காணப்படுவதற்கு கோபிநாத்தே முக்கிய காரணம், ஒவ்வொரு வாரமும் சிறப்பான நாம் அன்றாடம் சந்தித்துவரும் மனிதர்கள், அவர்களின் குணநலன்கள், மக்களின் பிரச்சினைகளை ஆகியவற்றை விவாதப் பொருளாக மாற்றி அவர் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார்.
சிறப்பான விவாதங்கள்
ஒரு விவாதப்பொருள், அதன் இரண்டு பக்கங்களை சொல்லும் மனிதர்கள், அவர்களின் விருப்பு வெறுப்புகளை வெளியில் கொண்டுவரும் கோபிநாத், இந்த மூன்று விஷயங்களை மையமாக கொண்டே நீயா நானா தொடர்ந்து 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
பாரம்பரிய -நவீன சமையல்காரர்கள்
இந்த வாரமும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரிய சமையல்காரகள், கேட்டரிங் செய்யும் நவீன சமையல்காரர்கள் இவர்களின் தரப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பாரம்பரிய சமையல்காரர்கள், தங்களின் உணவில், பரிமாறுதலில் காணப்படும் தனித்தன்மை தற்போதைய நவீன சமையலில் இருக்க வாய்ப்பில்லை என்று விவாதித்தனர்.
இருவேறு தரப்புகள்
தலை வாழை இலைப் போட்டு, சாப்பிட அமர்ந்தவுடன் விருந்தினர்களின் தேவைக்கேற்க தாங்கள் பரிமாறுவதால், விருந்தினர்களுக்கு மரியாதை கிடைப்பதுடன் உணவு வீணாவதை தடுக்க முடியும் என்று தெரிவித்தனர். இதேபோல நவீன சமையல்காரர்கள், தங்களது உணவில் வித்தியாசமான இந்திய, மற்றும் வெளிநாட்டு உணவுகளை சுவைக்கேற்ப தாங்கள் பரிமாறுவதாக தெரிவித்தனர்.
விருந்தினர்களை ஈர்க்கும் பிரசென்டேஷன்
மேலும் உணவில் பிரசென்டேஷன் தற்காலங்களில் முக்கியத் தேவையாக அமைந்துள்ளதாகவும், அதற்காக தாங்கள் மெனக்கெடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் காசு குறித்து பார்க்காமல், விருந்தினர்களின் தேவை குறித்தே தாங்கள் கணக்கு போடுவதாகவும் தெரிவித்தனர்.
சூர்யாவிற்கு பிடித்த கோதுமை பரோட்டா
இதனிடையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துக் கொண்டார். இவர் சமையல் கலைஞராகவும் நடிகராகவும் உள்ளார். இவர் பிரபலங்களுக்கு பிடித்த சமையலை பகிர்ந்துக் கொண்டார். மருத்துவர் ராமதாசுக்கு கம்பு சாதம் மிகவும் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இதேபோல சூர்யாவிற்கு கோதுமை பரோட்டா மிகவும் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு ரசனை மிக்க ஷங்கர்
அவருடைய தந்தை சிவக்குமாருக்கு பிசிபேளாபாத் மிகவும் பிடிக்கும் எனவும் பகிர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கருக்கு உணவு ரசனை மிகவும் அதிகம் எனவும் ஒவ்வொரு உணவையும் அவர் ரசித்து ருசித்து சாப்பிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். சமையல் கலை குறித்த பல சுவாரஸ்யங்களை அவர் பகிர்ந்துக் கொண்டார்.
ஒரே நேரத்தில் 75,000 பேருக்கு உணவு
தொடர்ந்து பேசிய அவர் தான் ஒரே நேரத்தில் திருமணத்தில் இரவு உணவுக்காக 75,000 பேருக்கு சமைத்ததாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபிநாத், இது எப்படி சாத்தியம் என்று கேட்க, அதிகமான மேன்பவரை கொண்டு இதை சாத்தியப்படுத்தியதாக கூறினார்.