விஜயபுராவில் நில நடுக்கம்
விஜயபுரா: விஜயபுரா மாவட்டத்தில், சமீப நாட்களாக அவ்வப்போது நில நடுக்கம் ஏற்படுகிறது. நேற்றிரவு 8:16 மணியளவில், விஜயபுரா, திக்கோட்டா, பபலேஸ்வரா, பசவனபாகேவாடி உட்பட, பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டிலிருந்த பொருட்கள், கீழே விழுந்தன. அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
ஏற்றுமதி மையம் அமைத்தல்
பெங்களூரு: நகரின் எலஹங்காவில் உள்ள ஜி.கே.வி.கே., வளாகத்தில் விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மாநாட்டை, விவசாய துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ”விவசாயிகளே தங்கள் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் வகையில் மையம், உணவு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்,” என்றார்.
தெருக்களில் விநாயகர் சிலைக்கு அனுமதி
பெங்களூரு: பெங்., மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் கூறுகையில், ”விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடும் வகையில், கொரோனாவுக்கு முந்தைய விதிமுறைகள் மட்டுமே அமல்படுத்தப்படும். தெருக்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடலாம். பெரிய சிலைகள் கரைக்க, நகரின் நான்கு ஏரிகள் தயார்ப்படுத்தப்படும். சிறிய சிலைகள் கரைக்க தொட்டிகளும், வீடுகளிலும் கரைத்து கொள்ளலாம்,” என்றார்.
யானைகளுக்கு 3,000 கிலோ கரும்பு
மைசூரு: தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு உணவு அளிப்பது தொடர்பாக, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்ட துணை வன காப்பாளர் கரிகாலன் அமைச்சருக்கு விளக்கினார். இந்த வேளையில் மைசூரு கன்னட வேதிகே அமைப்பினர், யானைகளுக்கு 3,000 கிலோ கரும்புகளை வழங்கினர்.
1,713 பேருக்கு கொரோனா
பெங்களூரு: பெங்களூரில் 965 பேர் உட்பட கர்நாடகா முழுதும் நேற்று ஒரே நாளில், 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 1,034 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு பேர் உயிரிழந்தனர். மொத்தம் 32 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 56 ஆயிரத்து 591 பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது.
எடியூரப்பா வரவேற்பு
பெங்களூரு: பெங்களூரில் நேற்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ”சித்தராமையா — ரம்பாபுரி சுவாமிகள் இடையே, உரையாடல் நடந்துள்ளது. அவர்கள் என்ன பேசினர் என்பது, வெளி உலகுக்கு தெரியாது. ஒரு வேளை சித்தராமையாவுக்கு, வீரசைவம் -லிங்காயத் சமுதாயத்தை பிரிக்க முற்பட்டது, தவறு என்பது புரிந்திருந்தால் சந்தோஷம்.அவருக்கு மனம் மாற்றம் ஏற்பட்டிருந்தால், அதை வரவேற்கிறேன்,” என்றார்.
நாளை முதல் 3 நாட்களுக்கு மழை
பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு வாரமாக மழை பெய்யாமல் இருந்த நிலையில், நாளை முதல், 24ம் தேதி வரை மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவில் மூன்று நாட்களும்; ஷிவமொகா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு, மைசூருல கோலாரில் 23, 24ம் தேதிகளிலும்; பெங்களூரு, பெங்., ரூரல், ராம்நகர், மாண்டியா, துமகூரு, சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தாவணகரேவில் 24ம் தேதியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., கறுப்பு கொடி
ஹாவேரி: முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹாவேரி, தார்வாட் மாவட்டங்களில் இன்று பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். ஆனால், தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., நேரு ஓலேகார் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. இதனால் இன்று முதல்வர் வருகையின் போது, கறுப்பு காட்டுவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் இல்லத்தில் போலி அதிகாரி
பெங்களூரு: பெங்., மாநகராட்சி தலைமை பொறியாளர் என்று கூறி கொண்டு, பரமேஸ், 38, என்ற நபர், குமாரகிருபா சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நுழைய முயன்றார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, போலி நபர் என்பது தெரிய வந்தது. ஹைகிரவுண்ட் போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு திட்டங்கள்
பெங்களூரு: மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பெங்களூரில் பேசுகையில், ”பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் மக்களின் வாழ்வை தரம் உயர்ந்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். சர்வதேச அளவில் இந்தியாவின் பெயர் தலை நிமிர செய்துள்ளோம். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தியுள்ளோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்