மொகதிசு: சோமாலிய அரசுக்கு எதிராக அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் சுமார் 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு அல் கய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது.
இந்நிலையில் மொகதிசுவில் உள்ள ஹயாத் ஓட்டலில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்து ஓட்டலுக்குள் சோமாலிய ராணுவத்தினர் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் இதுவரை அப்பாவிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஓட்டலில் தங்கியிருந்த குழந்தைகள் உட்பட பெரும்பாலானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஓட்டலில் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் பலர் ஹயாத் ஓட்டலுக்கு வெளியே சோகத்துடன் காத்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு அல்-ஷாபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். சோமாலியாவில் புதிய அதிபர் ஹாசன் ஷேக் முகமது கடந்த மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, மொகதிசுவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல் இது.
அல்-ஷாபாப் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் சோமாலிய படைகளுக்கு அமெரிக்க படை யினர் உதவி வருகின்றனர். சோமாலியாவில் இருந்த அமெரிக்க படைகளை முன்னாள் அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதும், சோமாலியாவில் மீண்டும்அமெரிக்க படைகள் இருக்க உத்தரவிட்டார். சமீபத்தில் சோமாலியா-எத்தியோப்பியா எல்லையில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது அமெரிக்கப்படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.