சோமாலியாவில், அந்த நாட்டு அரசுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்திவரும் அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழு, வெள்ளிகிழமை மாலையில் ஹோட்டல் ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேருக்கு மேல் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் மொகடிஷு ஹோட்டலில், அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் நேற்றுமுன்தினம் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த சோமாலியா ராணுவப் படையினர், தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள், ராணுவத்தினருக்கிடையிலான இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் உட்பட மொத்தம் 40 பேர் பலியாகினர். இருப்பினும் குழந்தைகள் உட்பட பெரும்பாலானோரை ராணுவத்தினர் மீட்டுவிட்டனர் என்று கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினரிடையே சுமார் 30 மணிநேரம் நீடித்ததாக கூறப்படும் இந்த மோதல் நேற்று முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து ஊடகத்திடம் பேசிய சோமாலிய பாதுகாப்புப் படை தளபதி, “கடந்த ஒரு மணி நேரத்தில் கட்டடத்தில் துப்பாக்கிச்சூடு எதுவும் இல்லை. பாதுகாப்புப் படைகள் தற்போது தீவிரவாதிகளின் முற்றுகையை முற்றிலுமாக முறியடித்துவிட்டன. மேலும், கட்டடத்துக்கள் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனையும் அகற்ற வேண்டும்” என தெரிவித்தார். இருப்பினும் தீவிரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.