முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு வினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய கொஞ்சம் அவகாசம் தேவை எனக் கடிதம் எழுதினர்.
இதனால், மேலும் மூன்று வார காலம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் 14வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்று பக்க விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது என்பதும், சமீபத்தில் இந்த ஆணையம் தனது விசாரணையை முழுமையான அளவில் முடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் 500 பக்கங்கள் கொண்ட தனது விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் இந்த அறிக்கை இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆணையம் அமைக்கப்பட்டது என்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவையே சர்ச்சையில் ஆழ்த்திவரும் ஜெயலலிதாவின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.