தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட 7 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்த மருத்துவக் குழுவானது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ஆய்வின் அடிப்படையில் ஆறுமகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த அறிக்கை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய நோய்களை சரியாக மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளானர். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்துமே தேதிவாரியாக சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரங்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
ஜெயலலிதாவுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அதுவே அவர் உயிரைப் பறித்துள்ளது. அவருக்கு பேக்டீரிமியா (bacteremia) என்ற ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே அவருக்கு செப்டிக் அதிர்வை ஏற்படுத்தி பல்வேறு உறுப்புகள் செயலிழக்கக் காரணமாக இருந்துள்ளது. மேலும் அவருடைய ரத்த அழுத்தம் குறையவும் அது காரணமாக இருந்துள்ளது. இதயம், இதய வால்வுகள், மிட்ரல் வால்வு ஆகியனவற்றில் தொற்று ஏற்பட்டது. இதனை இன்ஃபெக்டிவ் எண்டோகார்டிட்டிஸ் எனக் கூறுகின்றனர். அதேபோல் நுரையீரல் தொற்றும் ஏற்பட்டுள்ளது.
இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் பகுதியிலும் அடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதயம் செயலிழந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. மேலும் மருத்துவமனை அறிக்கையின்படி ஜெயலலிதாவுக்கு நீண்டகாலமாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் இருந்துள்ளது. உயர் ரத்த அழுத்தம், ஹைப்போதைராய்டு, ஆஸ்த்மாட்டிக் பார்ன்கிட்டிஸ், இரிட்டபிள் போவல் சிண்ட்ரோம், அடோபிக் டெர்மாடிடிஸ் ஆகியனவும் இருந்துள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ அறிக்கைகளை எய்ம்ஸ் குழு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் யார்? எய்ம்ஸ் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் விவரம் வருமாறு: இந்தக் குழுவிற்கு இதயவியல் துறை பேராசிரியர் மருத்துவச் சந்தீப் சேத் தலைமை வகுத்தார். நுரையீரல் சிகிச்சை நிபுணர் அனந்த் மோகன், மயக்கவியல் நிபுணர் விமி ரெவாரி, எண்டோக்ரைனாலஜி நிபுணர் ராஜேஷ் காட்காவத், தடயவியல் மருத்துவமை மருத்துவர் அனந்த் நவீன் ரெட்டி ஆகியோர் இஅடம்பெற்றிருந்தனர்.
ஆறுமுகசாமி ஆணைய காலம் ஆகஸ்ட் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.