வல்லம்: இந்தாண்டு மேட்டூர் அணை மே மாதத்திலேயே திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடி இலக்கை தாண்டி நடந்துள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை சாகுபடியில் களையெடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க உரம் தெளிக்கும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நெல் அதிகம் விளையும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு குறுவைக்கான சாகுபடி இலக்கான 43 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவை மிஞ்சி சுமார் 70 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குறுவை சாகுபடி நிறைவடைந்துள்ளது. இலக்கை மிஞ்சி இந்தாண்டு சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடிக்காக குறுவை பயிரிடவில்லை. மற்ற பகுதிகளில் 5 வாரங்களை கடந்த நிலையில் குறுவை பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகள் நடந்துள்ளது. நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், பாய் நாற்றங்கால், இயந்திரம் வாயிலாக நடவுப்பணி என விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தகுந்தவாறு குறுவை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வயல்களில் நெற்பயிர்களுக்கு இடையில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணிகள் மற்றும் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கும் வகையில் உரம் தெளிப்பு பணிகள் ஆகியவற்றில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். புதுகல்விராயன்பேட்டை, ராமநாதபுரம் ஊராட்சி ஆகியவற்றில் சாகுபடி வயல்களில் இருந்த களைகளை அகற்றும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஒரு சில பகுதிகளில் உரம் தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் சில யோசனைகளை வழங்கி உள்ளனர்.
குறுவை சாகுபடி செய்துள்ள வயல் வரப்புகளில் உளுந்து, துவரை போன்றவற்றை வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம். இதில் பூக்கும் மஞ்சள் நிற பூக்கள் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை பூச்சிகளை கவர்ந்து இழுக்கும். இதனால் பயிரை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் தீமைப்பூச்சிகள் ஒழியும். இந்த வரப்பு பயிர்களால் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
நன்கு செழித்து வளர்ந்துள்ள பயிர்களுக்கு தழைச்சத்து உரத்தை தேவையில்லாமல் இடக்கூடாது. இதனால் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வயல்களில் எங்காவது வெளிர் பச்சை நிறம் தென்பட்டால் தழைச்சத்து உரத்தை இடலாம். நாற்று நட்ட வயல்களில் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண் சத்து உரத்தை தெளிக்கலாம். இந்த நெல் நுண் சத்து உரம் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் மானிய விலையில் கிடைக்கிறது.
அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்களில் பூச்சிகள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயிர்களில் ஏதாவது பாதிப்புகள் உள்ளதாக என்பதை கவனமாக பார்க்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளையில் சாகுபடி வயல்களை பார்வையிட்டு பூச்சிகள் தாக்குதலை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் நாற்றுகள் நன்கு செழித்து வளர்ந்துள்ள நிலையில் வயல்களில் தென்படும் களைகளை பறித்தால் மட்டும் போதுமானதாகும். மேலும் விபரங்கள், உரம் தெளிப்பு குறித்த சந்தேகங்களுக்கு வேளாண் துறை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம் என்றனர்.