சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தடையின்றி வழங்கவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றுகின்றனர். இதை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மேலும் ஒரு மணி நேரம் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமலிங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது. அவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியுடன், நிர்வாகப் பணிகளையும் சேர்த்து பார்க்கவேண்டி உள்ளது. மத்திய, மாநில சுகாதாரத் திட்டங்களிலும் பணியாற்றுகிறோம். அதனால்தான் கடந்த திமுக ஆட்சியில் எங்களது பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி என குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுஉள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய அலுவலக ஊழியர்களுக்கும் தினமும் 8 மணி நேரம்தான் பணி வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு சனி, ஞாயிறு விடுப்பு உண்டு. அவர்கள் வாரத்துக்கு 42 மணி நேரம் பணியாற்றுகின்றனர். மருத்துவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதால், வாரத்துக்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இதுதவிர, அவசர பணி, கூட்டம் உள்ளிட்ட கூடுதல் பணிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ப எந்த சலுகையும் வழங்கப்படுவது இல்லை.
இது உழைப்பு சுரண்டல். தொழிலாளர் நலனுக்கு எதிரானது.
அடுத்தகட்டமாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்கும் இந்தநடைமுறை அமலுக்கு வரக்கூடும். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே உள்ளபடி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான பணி நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கேட்டபோது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை என நிர்ணயித்து 1989 ஜன.20-ல் அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர், பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி என குறைத்து 2009 அக்.14-ல் அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீஷியன்கள் ஆகியோர், ‘‘மருத்துவர்கள் 9 மணிக்குதான் பணிக்கு வருகின்றனர். அதன் பிறகுதான் மருந்து, மாத்திரை கொடுக்கப்போகிறோம். பரிசோதனை செய்கிறோம். எங்களை மட்டும் ஏன் 8 மணிக்கே வரச்சொல்கிறீர்கள்? எங்களையும் 9 மணிக்கு வரச் சொல்லுங்கள்’’ என்கின்றனர். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்க மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி அமைச்சர், செயலருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்” என்றார்.
மருத்துவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு வழங்கப்படுவதால், வாரத்துக்கு 48 மணி நேரம் பணியாற்ற வேண்டும். அவசர பணி, கூட்டம் உள்ளிட்ட கூடுதல் பணிகளும் தரப்படுகின்றன.