தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கிறது, என தருமபுரியில் நடந்த பிரச்சார நடைபயணத்தின்போது அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார்.
தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு காவிரி உபரிநீரை வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் இருந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நேற்று முன்தினம் பிரச்சார நடைபயணம் தொடங்கினார். 2-வது நாளான நேற்று தருமபுரி அடுத்த குரும்பட்டி டீக்கடை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கினார்.
சோலைக்கொட்டாய், நடுப்பட்டி, மூக்கனூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர் பேரூராட்சி, நத்தமேடு மற்றும் ஜாலியூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ் தருமபுரி நகரில் நடைபயணத்தை முடித்தார். குரும்பட்டியில் அவர் பேசியது:
தருமபுரி மாவட்ட நிலத்தடி நீரில் புளூரைடு பாதிப்பு அதிகம் உள்ளது. காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றினால் புளூரைடு தாக்கம் குறையும், விவசாயமும் செழிக்கும். இந்தத் திட்டம் குறித்து முதலில் குரல் எழுப்பியது பாமக தான். தமிழகத்தை மாறிமாறி ஆண்ட மற்ற கட்சிகள் அடுத்த தேர்தலுக்காக சிந்தித்தபோது, பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக, அவர்களின் வாழ்வு மேம்பட சிந்தித்த கட்சி. தற்போது அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை. சுமார் 18 லட்சம் மக்கள் உள்ள மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைக்காக வந்துள்ளேன்.
தமிழகத்தில் காவிரியின் குறுக்கே மேட்டூரை தவிர தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி இல்லாததால் உபரிநீர் கடலுக்குத் தான் செல்கிறது. வீணாவதில் 3 டிஎம்சி தண்ணீரை தருமபுரி மாவட்ட தேவைக்கு கொடுத்தால், வாழ்வாதாரம் தேடி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு சென்றுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்புவர்.
தருமபுரி மாவட்டத்தில் கூடுதலாக 1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று செழிப்படையும். இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரை தருமபுரி மாவட்ட மக்கள் விடமாட்டார்கள் என்று அரசு நினைக்கும் அளவுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். அதற்கும் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை எனில் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவோம், என்றார்.
நிகழ்ச்சியின்போது, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, வன்னியர் சங்க மாநில நிர்வாகி அரசாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.